Sunday, February 18, 2024

நட்டுமை நூலுக்கான முன்னுரை- எம். ஏ. நுஃமான்

 

நட்டுமை நூலுக்கான முன்னுரை- எம். ஏ. நுஃமான்

 

நட்டுமை’ என்பது பொது வழக்கில் இல்லாதஒரு விவசாயக் கலைச்சொல். கிழக்கிலங்கை அம்பாறை மாவட்ட முஸ்லிம் விவசாயிகள் மத்தியில் இச்சொல் வழக்கில் உண்டு. ஒரு வயலில் கட்டிவைத்த நீர் வரம்பு களில் உள்ள வெடிப்புகளால் அல்லது வேறு துளை களால் வயற்காரன் அறியாமல் அடுத்த வயலுக்குள் கசிந்து இறங்குவதை இது குறிக்கும். ‘நட்டுமை போயிருக்கு’ என்றால் வயல் நீர் களவாக அடுத்த வயலுக்குள் இறங்கியிருக்கிறது என்று பொருள். ஆண் பெண் இடையிலான கள்ள உறவைக் குறிப்பதற்கும் இச்சொல் உருவகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

இச்சொல் வழக்கைப் பயன்படுத்தி, ‘நட்டுமை போகவில்லை’ என்ற தலைப்பில் காலஞ்சென்ற கவிஞர் நண்பர் பஸீல் காரியப்பர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். போடியார் தன்னைப் பெண்டாள நினைப்பதை மனைவி தன் கணவனிடம் கோபத்துடன் முறையிடுவதாக அமைந்த கவிதை அது.

கொள்ளையாக் கதைச்சாங்கா அந்த ஆள்

கோபம் என்டா பத்திக்கு வந்திச்சு

பிள்ளை ஒன்டுக்கும் சுகமில்லையாம் - அவன்ர

பொண்டாட்டியும் அவட உம்மாட்ட போறாவாம்

வெள்ளிக் கிழமை அதுதான் நாளைக்கு மத்தியானம்

வீட்ட வரட்டாம் ஒரு வேலை இருக்காம்

கள்ளச் சிரிப்பும் அவன்ட கால்ல ஒரு சப்பாத்தும்

வெள்ளாமைக் காரன் பொண்டாட்டி எண்டா என்ன

வேசி எண்டா இந்த நாய் நெனச்சான்

என்று முடிகிறது அந்தக் கவிதை. மட்டக்களப்பு முஸ்லிம் களின் பேச்சுத் தமிழில் போடியாரின் ஆசைக்குப் பணியமறுக்கும் ஒரு பெண்ணின் குரலாக அமையும் இந்தக் கவிதைக்கு ‘நட்டுமை போகவில்லை’ என்று தலைப்பு வைத் திருக்கிறார் கவிஞர். மட்டக்களப்பு முஸ்லிம்களின் பேச்சு வழக்கு அறியாதவர்களுக்கு இந்தத் தலைப்பும் கவிதையும் புரிவது சிரமம்தான்.

தீரன் நௌஸாத்தின் ‘நட்டுமை’ குறுநாவலைப் படித்த போது பஸீல் காரியப்பரின் இந்தக் கவிதை ஞாபகம் வந்தது. இந்த நாவலும் நட்டுமையின் உருவக வழக்கில் சின்னப் போடியார் முகம்மது ஹனீபாவின் நட்டுமை நடத்தையைச் சுற்றி விரிகிறது.

இந்நாவலாசிரியர் தீரன் ஆர்.ஏம். நௌஸாத் கிழக் கிலங்கை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கல்முனையில் தபால் அதிபராகக் கடமை புரிகிறார். கிழக்கிலங்கையின் முக்கியமான இளம் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், 1980களிலிருந்து எழுதி வருகிறார். இதுவரை சுமார் இருபத்தைந்து சிறுகதைகளும் பல கவிதைகளும் எழுதியிருக்கிறார். போட்டிகளில் பரிசு பெற்ற இவரது எட்டுச் சிறுகதைகளின் தொகுப்பு ‘வல்லமை தாராயோ’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இவரது ‘பள்ளிமுனைக் கிராமத்தின் கதை’ முஸ்லிம் குரல் என்ற பத்திரிகையில் 2003இல் தொடராக வெளிவந்தது. சுந்தர ராமசாமி நினைவுக் குறுநாவல் போட்டியில் முதல் பரிசுபெற்ற ‘நட்டுமை’ நூலுருப்பெறும் இவரது முதலாவது நாவல்.

சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய கிழக் கிலங்கை முஸ்லிம் கிராமம் ஒன்றை களமாகக் கொண்டது இந்த நாவல். கிழக்கிலங்கை முஸ்லிம் கிராம வாழ்வின் ஒரு பக்கத்தை இந்நாவல் நமக்குக் காட்ட முயல்கின்றது.

கிழக்கிலங்கைக் கிராமங்கள் பெரும்பாலும் விவசாயக்கிராமங்கள்தான். நவீனமயப்பட்ட இன்றைய சூழலில்கூட

நிலஉடைமைச் சமூகத்தின் எச்சங்கள் பலவற்றை இங்குக   £ணலாம். இந்த நாவல் நவீனமயமாதலுக்கு முற்பட்ட சூழலைப் பின்புலமாகக் கொண்டது. அன்றையக் கிராமங்களில் போடிமார் முக்கியமான அதிகார மையங்களாக இருந்தனர். போடி என்ற சொல் நிலஉடைமையாளர்களைக் குறிக்கும். போடியார் என அவர்கள் மரியாதையாக அழைக்கப்பட்டனர். நிலத்தையும் பணத்தையும் மூலதனமாகக் கொண்டவர்கள் இவர்கள். உடலுழைப்புடன் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்கள். போடியாரின் நிலத்தில் பயிர்ச் செய்கைக்குப் பொறுப்பானவர் வயற்காரர் என அழைக்கப்பட்டார். இவர்கள் போடியாரின்

 பண மூலதனத்துடன் தமது உடலுழைப்பைச் செலுத்தி பயிர்ச் செய்கையில் ஈடுபடுவர். ஒவ்வொரு போடியாரும் குறைந்த பட்சம் ஒரு வயற்காரனைக் கொண்டிருப்பார். உற்பத்திசார்ந்த வயல் நிருவாகம் முழுவதையும் இவர்களே மேற்கொள்வர். போடிமாருக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள உறவு நில உடைமை உறவாகவே இருக்கும். வயற்காரனின் முழுக் குடும்பமும் போடியாரின் குடும்பத்துடன் நெருக்கமான ஊழிய உறவில் கட்டுண்டிருக்கும்.

விவசாயத்துடன் பிணைப்புண்ட பிறிதொரு பிரிவினர் கூலி விவசாயிகள். உழுதல், விதைத்தல், அறுவடை செய்தல், சூடடித்தல் முதலிய வேலைகளை இவர்களே செய்வர். இவர் களது கூலி நெல்லாகவோ பணமாகவோ கிடைக்கும்.

வயற்காரரைவிட போடியாரின் வயல்களை மேற்பார்வை செய்வோரும் இருந்தனர். இவர்கள் முல்லைக்காரர் என அழைக்கப்பட்டனர். பெரிய போடிமார் தமக்கென முல்லைக் காரர் ஒருவரை வைத்திருப்பர்.

பலருடைய வயல்களை உள்ளடக்கிய ஒரு வயற் பிரதேசம் கண்டம், வெளிவட்டை என பலவாறு அழைக்கப்பட்டது. அத்தகைய ஒவ்வொரு வயற் பிரதேசத்துக்கும் நீர்ப்பாய்ச்சல்,

             £துகாப்பு நிருவாகத்துக்குப் பொறுப்பாக ஒரு வட்டை விதானை நியமிக்கப்பட்டிருப்பார். பேச்சு வழக்கில் இவர் வட்டானை எனப்பட்டார். விதானை காலனித்துவ காலத்தில் இங்கு அறிமுகமான சொல். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கிராம அதிகாரியே விதானை எனப்பட்டார். பிரித்தானிய ஆட்சி யாளர் சில விதானைமாருக்குப் பொலிஸ் அதிகாரமும் வழங்கி யிருந்தனர். இவர்கள் பொலிஸ் விதானை என அழைக்கப் பட்டனர். இது பேச்சுவழக்கில் பொலிசானை என்று மருவிற்று.

இந்த நாவல் உம்மாதுறை என்ற ஒரு முஸ்லிம் விவசாயக் கிராமத்தின் இந்த அதிகார மையங்களைப் பின்புலமாகக் கொண்டு வளர்கிறது. சுதந்திரத்துக்குச் சற்று முந்திய ஒரு முஸ்லிம் விவசாயக் கிராமத்தின் சமூக வாழ்வை, அதன் அசைவியக்கத்தை, அதன் சகல அம்சங்களுடனும் சித்திரிப்பது ஆசிரியரின் நோக்கமல்ல என்று தெரிகிறது.

1930கள் கிழக்கிலங்கையின் சமூக அரசியல் அசை வியக்கத்தில் முக்கியமான காலகட்டம் எனலாம். தென்னாசியா வில் இலங்கையில்தான் முதல்முதல் சர்வசன வாக்குரிமை அமுலுக்கு வந்தது. சர்வசன வாக்குரிமையின் அடிப்படையில் சட்டசபைக்கான முதலாவது பொதுத் தேர்தல் 1931இல் நடைபெற்றது. இந்த நாவலின் கிராமம் உள்ளடங்கும்

மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் பிரமுகரான மாக்கான் மாக்கார் போட்டியிட்டார். முஸ்லிம் பெண்களை வாக்களிக்கத் தூண்டுவதற்காகக் கொழும் பில் இருந்து உலமாக்களைக் கொண்டுவந்து பெண்கள் வீட்டை விட்டு வெளியேவந்து வாக்களிக்கச் செல்லலாம் என்று ஃபத்வா கொடுக்கச் செய்தார் என அவர் பற்றிய குறிப்பு ஒன்று உண்டு. இந்த நாவல் தொடங்கும் 1936இல் இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இனத்துவ அடையாள அரசியல் அதிர்வுகள் ஏற்படத் தொடங்கிய காலகட்டம் இதுதான். தங்களுக்கும் கல்வி, தொழில் வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், அரசியல் அதிகாரம் என்பன வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் மேற்கிளம்பத் தொடங்கிய காலம் இது. 1936இல்             £ன் கல்முனையில் முதல்முதல் பெண்களுக்கான ஒரு பள்ளிக்கூடமும் ஆரம்பிக்கப்பட்டது. இத்தகைய சமூக அசை வியக்கத்தை, அரசியல் அதிர்வுகளைப் பதிவு செய்வது நாவ லாசிரியரின் நோக்கமாக இருக்கவில்லை. அவை இந்த நாவலின் தூரத்துச் செய்தியாகக்கூட இல்லை. உம்மாதுறை ஒரு விவசாயக் கிராமமாக இருந்தாலும் நீர்ப்பாய்ச்சல் தொடர் பான சிறு சச்சரவைத் தவிர விவசாயக் கிராமத்தின் உற்பத்தி உறவுகளோ, வர்க்க உறவுகளோ, விவசாயிகளின் வாழ்க்கை அனுபவங்களோ இந்நாவலின் மையமாக இல்லை.

அரசியல், சமூக அசைவியக்கங்களிலிருந்து விலகிய ஒரு ‘தூய’ முஸ்லிம் விவசாயக் கிராமத்தையும், அதன் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றையும், அக்கிராமத்து மக்களின் தனிமனித நடத்தைக் கோலங்களையும் சித்திரமாக்குவதே இங்கு நாவலாசிரியரின் நோக்கமாகத் தெரிகிறது. இதுவரை தமிழ் வாசகர்கள் அறியாத ஒரு புதிய வாழ்க்கைப் புலத்தை இந்நாவல் கட்டமைக்கிறது. அந்தவகையில் இந்நாவல் நௌஸாத்தின் ஒரு வெற்றிப் படைப்பு என்றுதான் கூற வேண்டும். சுந்தர ராமசாமி நினைவுக் குறுநாவல் போட்டியில் இந்நாவல் முதல் பரிசு பெற்றமை ஆசிரியரின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது எனலாம்.

இந்த நாவலின் முக்கியமான பாத்திரம் பெரிய போடியார் அகமது லெவ்வை. இந்த நாவலை முழுமையாக அவர் ஆக்கிரமித்துக்கொள்ளாவிடினும் அவரது அதிகார மையத்தின் நிழல்களாகவே ஏனைய பாத்திரங்கள் இயங்குகின்றன. பெரிய போடியார் தனது மகன் சின்னப் போடியார் முகம்மது அனிபாவுக்கு 90 ஏக்கர் காணியை நன்கொடையாக எழுதி வைக்கும் நிகழ்வுடன் நாவல் தொடங்குகின்றது. தன் மகன்பிறிதொருவனின் மனைவியுடன் கள்ள உறவு கொண்டு அதன் க           £ரணமாகக் கொல்லப்பட்டபின், கள்ள உறவின் மூலம் அவனுக்குப் பிறந்த குழந்தையை தன் பேரக் குழந்தையாகவும் தன் குடும்ப உறுப்பினனாகவும் அவர் ஏற்றுக்கொள்வதுடன் நாவல் முடிகிறது. பெரிய போடியார் ஆளுமை மிக்க, அன்பும் கருணையும் கொண்ட ஒரு நாயகனாக இந்நாவலில் உரு வாக்கப்பட்டிருக்கிறார். போடிமார் பற்றிய ஒரு உடன்பாடான சித்திரம் இது.

 

ஆயினும் நாவலின் பிரதான கதைப்பின்னல் சின்னப் போடியார் முகம்மது அனீபாவின் காதல், காமம், சண்டித்தனம், அதன் விளைவான சண்டை, கொலை ஆகியவற்றைச் சுற்றியே நகர்கிறது.

முகம்மது அனீபாவுக்குப் பல பெண்களோடு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. என்றாலும் மீராவட்டானையின் மகள் செய்னம்பு மீது அவனுக்குக் காதல். அதேவேளை தன் எடுபிடியும் தோழனுமான மம்மலியின் (முகம்மது அலி என்பதன் கிராமியத் திரிபு) இளம் மனைவியும் செய்னம்புவின் தோழியுமான யம்னாவுடன் அவளது விருப்புக்கு மாறாகவே உறவு வைத்திருக்கிறான். அதன்மூலம் அவள் வயிற்றில் ஒரு குழந்தையும் வளர்கிறது. விபரம் புரியாத மம்மலி அதைத் தன் குழந்தை என்றே நினைக்கிறான். சின்னப் போடியாருக்குச் செய்னம்பு மீதுள்ள காதலுக்குத் துணைநின்று அவளை அவனுக்குத் திருமணம் செய்துவைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறான்.

செய்னம்புவுக்கோ தன் மாமி மகன் - முறைமாப்பிள்ளை - உமறுலெவ்வைமீது விருப்பம் இருக்கிறது. இதன் காரணமாக சின்னப் போடியாருக்கும் உமறுலெவ்வைக்கும் இடையே முரண்பாடு வளர்ந்து அடிதடிவரை போகிறது. உமறுலெவ்வை கைதுசெய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறான். அவனை விடுவிப்பதற்கு மீராவட்டானை பெரிய போடியாரின் உதவியை நாடுகிறார். மகன் சம்மதித்தால், தான் அதைச் செய்வதாக பெரிய போடியார் கூறுகிறார். தன் மகளை அவ னுக்குக் கலியாணம் செய்யச் சம்மதித்தால்தான் சின்னப் போடி அதற்கு இணங்குவான் என்பது அவருக்குத் தெரியவரு கிறது. தவிர்க்க முடியாமல் அவரும் அந்த முடிவுக்கு வருகிறார்.

ஆனால் சின்னப் போடியை செய்னம்புவுக்குக் கட்டி வைப்பதில் யம்னாவுக்கு உடன்பாடு இல்லை. அவள் தன் கணவன் மம்மலியிடம் சின்னப் போடி பற்றிய உண்மையைச் சொல்லிவிடுகிறாள். மம்மலி தன் எஜமான விசுவாசத்தை மறந்து, சந்தர்ப்பம் பார்த்து சின்னப் போடியைக் கொன்று பழிதீர்த்துகொள்கிறான். தானும் நச்சுக்காயைத் தின்று மருத்துவமனையில் இறந்துபோகிறான். யம்னா குழந்தை யைப் பெற்றெடுக்கிறாள். உமறுலெவ்வை செய்னம்பு திருமணம் நிறைவேறுகிறது. யம்னா பெரிய போடியாரிடம் உண்மையைச் சொல்லிவிட்டு தற்கொலைசெய்துகொள்கிறாள். போடியார் அது தன் பேரக்குழந்தைதான் என்பதை அதன் கைவிரல் அமைப்பைக்கொண்டு அடையாளம் காண்கிறார். மக்காவுக்குச் சென்று ஹாஜியாராகத் திரும்பிவந்து தன் பேரனைப் பொறுப் பேற்றுக்கொள்கிறார். இந்த நாவலின் கதைச் சட்டகம் அல்லது எலும்புக்கூடு இதுதான்.

இக்கதையில் தமிழ் சினிமாவின் நிழல் படிந்திருந்தாலும், ஆசிரியர் இதற்கு இரத்தமும் தசையும் சேர்த்து ஒரு அசல் கிராமத்தின் உயிரையும் உருவத்தையும் கொடுக்க முயன்றிருக் கிறார். நவீனத்துவத்தின் வாடைபடியாத கிராமத்து மனிதர்கள் சிலரைப் பாத்திரமாக்கியிருக்கிறார். பெரிய போடியார் அகமது லெவ்வை, மீரா வட்டானை, சின்னப் போடியார் முகம்மது அனீபா, உமறுலெவ்வை, மம்மலி ஆகிய ஆண் பாத்திரங் களும், யம்னா, செய்னம்பு ஆகிய பெண் பாத்திரங்களுமே இந்த நாவலை நகர்த்திச் செல்கின்றன. இடைக்கிடை வந்து போகும் முக்குலத்துக் கிழவிக்கும் இந்நாவலில் முக்கிய இடம் உண்டு. போடியார் வீட்டுப் பெண்கள் முகமற்றவர்களாகவே வந்துபோகின்றனர். சிறிது நேரம்தான் வந்துபோனாலும் அத்தர்பாவா நம் மனதில் இடம்பிடித்துவிடுகிறார். காட்டுப்பள்ளி கொடியேற்ற விழாவும், பொத்துவில் பீர் முகம்மது அண்ணா வியார் குழுவினரின் பொல்லடி நிகழ்ச்சியும் கிராமியப் பண் பாட்டுக் கூறுகளாக அறிமுகமாகின்றன.

இந்நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உரையாடல் மொழி விசேடமாகக் குறிப்பிடத்தக்கது. கிழக்கிலங்கை முஸ்லீம் களின் பேச்சுவழக்கைக் கையாள்வதில் ஆசிரியர் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார். நாவலுக்கு இந்த மொழி ஒரு புதிய வலுவைக் கொடுக்கிறது. சமூகக் கட்டமைப்பு பற்றிய ஒரு ஆழமான பார்வையை இந்நாவல் வெளிப்படுத்தாவிட்டா லும், ஒரு புதிய வாழ்க்கைப் புலத்தைத் தமிழ் நாவலுலகுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் தன் முக்கியத்துவத்தை நிலை நாட்டிக்கொள்கிறது எனலாம். நாவலாசிரியருக்கு என் பாராட்டுக்கள்.

எம். ஏ. நுஃமான்

 

No comments:

Post a Comment