Sunday, February 18, 2024

வெள்ளிவிரல் நூலுக்கான முன்னுரை – எம்.ரி.எம். நிஸாம்

 

வெள்ளிவிரல்  நூலுக்கான முன்னுரை – எம்.ரி.எம். நிஸாம்

 

சிறுகதைகள் ஏன் படைக்கப்படுகின்றன என்பதற்கு  இதுவரையில் யாரும் திருப்திகரமான பதில் அளிக்கவில்லை.  ஆயினும் உலகில்  பற்பல மொழிகளிலும்  சிறுகதைகள் படைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

பெருகிய வெளிப்பாட்டுணர்வின், இறுகிய வடிவம் சிறுகதை ஆகின்றது  என்றும், சிறுகதை படைப்பது என்பது  ஒரு தவம்  அல்லது  அது ஒரு அருள்  என்றெல்லாம்  கூறப்படுகின்றன.  அது ஒரு  படைப்பு என்ற வகையில்  அதனைப் படைப்பவன்  இறைமையை உணர்கின்றான்  என்றும் அது  ஒரு பிரசவம் என்பதால்  பிரசவிப்பவன்  தாய்மையை அனுபவிக்கின்றான்  என்றும் கருதப்படுகின்றன.  இத்தகைய கருது கோள்களுக்கு மத்தியில்  காலத்தை வென்று வாழும் படைப்புக்கள்  யாராலும்  திட்டமிடப்படாமலே  உருவாகின்றன. அவை தாமாகவே உருவாகி  எவ்வாறேனும்  எவர் மூலமாகவேனும் வெளிப்பட்டு விடுகின்றன.

இந்நூலாசிரியரான, தீரன்.ஆர்.எம். நௌஷாத்  தென்கிழக்கிலங்கையின் ஒரு பாரம்பரியக் கிராமமான  சாய்ந்தமருதில் பிறந்தவர். இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் பொறுப்புத் தபாலதிபராக  கடமை செய்பவர்.  தவிரவும்,  தான் வாழும் சமூகக் கட்டமைப்பின்  கூறுகள்  மீதான   தீவிரமான  உணர்வுகளையுடைய  ஒரு படைப்பாளியும்  ஒரு வித்தியாசமான கதைசொல்லியும் ஆவார்.  அவர் தன் கதைகளுக்கு  போர்த்தியுள்ள ஒரு மாய நடையும்  தன் கதைகளில் கையாண்டுள்ள  நவீன உத்திகளும் தேர்ந்தெடுத்த  வித்தியாசமான கதைக் களங்களும்  பட்டவர்த்தனமான  உரையாடல் மொழிகளும்  நம்மை அவரது  கதைகளோடு  மிகவும் ஒன்றிக்கச் செய்து விடுகின்றன.  ‘’வாசகர்களில் தன் உணர்வுகளைத் தொற்றவைக்கும் இந்த வெற்றி  எழுத்தாளர்களுக்கு  இலகுவில் கிட்டுவதில்லை , இதனை இவர்  சிறப்பாகக் கையாண்டுள்ளார் என்பது என் அபிப்பிராயமாகும்..’’ என்று  எழுத்தாளர் உமா வரதராஜன்  இவரைப் பற்றிக் கூறியிருப்பது  மிகப் பொருத்தமானதாகும்.

உலகத் தமிழ் சிறுகதை என்ற  விரிந்த மாகடலில்  ஆர்.எம். நௌஷாத்தின்  நவீன உத்திகள் கொண்ட  இச் சிறுகதைகள்  கிழக்கிலங்கையின்  சில முஸ்லிம் எழுத்தாளர்கள்  வழமையாக எழுதிவரும்  ஒருவகையான பாரம்பரியம் மீதான  கதைக்கட்டுமானத்தை உடைத்து  வித்தியாசமான எழுத்துப் பேரலைகளாகப் பாய்ந்திருக்கின்றன.

பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவையான  இவரது இந்த  பன்னிரண்டு சிறுகதைகள்  தொகுக்கப்பட்டு  வெள்ளிவிரல் என்னும் தலைப்பில்  தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகத்தினரால் வெளியிடப்படுகின்றது. . ஏற்கனவே 2008 இல், தமிழ்நாட்டில்,  ‘சுந்தர ராமசாமி 7 5  நினைவு  நாவல் போட்டி’’ யில்  முதற்பரிசு பெற்ற  இவரது  நட்டுமை நாவலைத் தவிர்த்து  கிழக்கில் ஒரு நாவல்  வரலாற்றை  யாராலும் எழுத முடியாதது போலவே  இப்போதும் ‘வெள்ளிவிரல்’ என்ற  இச் சிறுகதைத் தொகுதியைத் தவிர்த்து விட்டு  சிறுகதை வரலாற்றை  ஒரு ஆய்வாளரால்  எழுத முடியாது என்பதை  இச்சிறுகதைகளை  வாசிக்கும் போது  வாசகரால்  புரிந்துகொள்ள முடியும்.  இந்த வெற்றியே  இவரது எழுத்துக்களின்  தீர்க்கமான  அங்கீகாரம். நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

அல்ஹாஜ். எம்.ரி.ஏ. நிஸாம்.

மாகாண கல்விப் பணிப்பாளர்.

கிழக்கு மாகாணம்

இலங்கை.

2011.08.01

 

 

 

No comments:

Post a Comment