Sunday, February 18, 2024

வக்காத்துக்குளம் நூலுக்கான முன்னுரை.. கிண்ணியா எஸ். பாயிஷா அலி.

 

வக்காத்துக்குளம் நூலுக்கான முன்னுரை.. 

கிண்ணியா எஸ். பாயிஷா அலி.

 

பசுங்கருத்துக்கால ஈரப்பதிவுகள்......மரக்காலையொன்றில் நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருக்கும் அரிந்த தண்டுத் துண்டங்களின் குறுக்குவெட்டு முகத்தை உற்று நோக்கியதுண்டா? நீரலைகள் விரிந்தலைவது போலத் தெரியும் அழகழகான வளைகோடுகள் அதில் பதிந்திருக்குமே. காலத்தின் சாட்சியாகிப்போன ஆண்டுவளையங்களெனும் அக்கோட்டுச் சித்திரங்களைக் கண்டாலே, குறித்த அம்மரம் யாரிடமும் சொல்லாத தன் இளமைக் காலத்தின் பேரிரகசியங்களையெல்லாம் அதற்குள் புதைத்து வைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றும்.

 அம்மரத்துண்டங்கள் சீவிச் செப்பனிடப்பட்டு வடிவமைக்கப்படும் அகன்ற கதவுகளுக்கருகில் சென்றாலுங்கூட ஆர்வமாய் அச்சித்திரவளையங்களைத் தொட்டுத் தடவிப் பார்ப்பேன். மிக அமைதியாய் தனித்திருக்கும் அக்கதவுகளோ தமக்குள் பதித்து வைத்திருக்கும் வாழ்நாளின் மகிழ்ச்சி, நிறைவு, ஏக்கம், தவிப்பு சோகங்களையெல்லாம் தன் விருட்ச மொழியில் மிக ரகசியமாய் என்னோடு மட்டும் உரையாடுவது போலவே எனக்குத் தோன்றும்.

 சகோதரர் தீரன். R.M. நெளஸாத் அவர்களின் வக்காத்துக் குளம் குறுநாவலை முழுசாய் படித்துமுடித்து, மனசு கனத்துப்போன அமைதியான ஒரு அந்திமாலைப் பொழுதில், அந்திமக் கால விருட்சமொன்றின் பசுங்குருத்து ஈரப்பதிவுகளை மறுபடியுமாய் உள்வாங்கிக் கொண்ட பெருமித நிறைவு எனக்குள்.

 தீரன் ஆர்.எம். நௌஷாத் அறிமுகமே தேவையற்ற அற்புதமான ஓர் கதைசொல்லி. தொழில்முறையில் ஓய்வுநிலைத் தபாலதிபர்.  நாவல், சிறுகதை, கவிதை, குறும்பா மற்றும் ஆய்வுகள்... என பல்வேறுபட்ட இலக்கியப் படைப்புகளின் சொந்தக்காரர்.

 முஸ்லீம் நாவலாசிரியர் வரிசையில் 17வது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் இவரது முதல் நாவல் நட்டுமை.

  பச்சைப் பசேலெனும் வயல்களும், குளிர்ந்த வாய்க்கால்களும் அதையொட்டி வாழ்ந்த நெய்தல் நில மக்களின் மனஅவசங்களுமாய்  நீளும் அற்புத நாவலது.

 ஒவ்வொரு அத்தியாயமும் தேர்ந்த இயக்குனர் ஒருவர் இயக்கிச் செப்பனிட்ட திரைக்காட்சிகளாகவே எனக்குள் விரிந்த மிக வித்தியாசமான வாசிப்பனுபவத்தை தந்த நாவலது.

 'நட்டுமை' தவிர்ந்து, 'கொல்வதெழுதுதல் 90' (நூலாக), 'நிற்பதுவே/பறப்பதுவே/நடப்பதுவே', 'வானவில்லே ஒரு கவிதை' (இரண்டும் பத்திரிகையில் தொடராக வெளிவந்தவை) போன்ற நாவல்களும், அத்தோடு 'வல்லமை தாராயோ', 'வெள்ளிவிரல்' என்பன அவரின் சிறுகதைத் தொகுதிகளும் ஆகும்.

  'வெள்ளிவிரல்' இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றதோடு கிழக்கு மாகாண சாகித்திய விருதினையும் வென்ற நூலாகும்.

  நட்டுமை நாவலும் காலச்சுவடு நடாத்திய சுந்தர ராமசாமி நினைவு போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவலாகும்.

 இதேபோல இந்த 'வக்காத்துக்குளம்' நாவல் கூட அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி அனைத்துலக ரீதியாக நடாத்தப்பட்ட குறுநாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற நாவலென்பது சிறப்பிற்குரியது.

 இனி நாவலுக்குள் நுழைவோம்.

 வளமான வாழ்வைத் தேடிப் புலம் பெயர்ந்த சதக்கா எனும் இளைஞர் மறுபடியும் அறுபதுகளின் முதியவராய், தான் பிறந்து, தொட்டளைந்து விளையாடி வளர்ந்த தன் சொந்த மண்ணில் பாதம் பதிக்கிறார்.

 உயிர்ப்புள்ள நந்தவனமாய்... சொர்க்கபுரியாய்... இன்றளவுக்கும் தனக்குள் நின்று நிலைத்த வக்காத்துக்குளம் என்ற தனது பொன் நிலம் மாநகரமாகி மாடி மாடியாய் வீடுகள் அடுக்கப்பட்ட கொங்கிரீட் காடாய் மாறிப்போன அவலம் கண்டு பதைபதைக்கிறார்.

  தன்னிலைக் கூற்றுகளாய்... ஏக்கப் பெருமூச்சுடன் கூடிய மெல்லிய முணுமுணுப்பாய் வெளிப்படும் சதக்காவின் பால்ய நினைவுகளே இங்கு குறுநாவலாய் விரிகின்றன.

  (சிறுகதைக்கும் நாவலுக்கும் வேகம், கருத்து எனும் கூறுகள் பொருந்துவதால் குறுநாவல் எனும் இடைநிலை வடிவம் தற்போது தோன்றியுள்ளதாக எங்கோ வாசித்தது நினைவு)

 ஊரின் மாற்றங்கள் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மனசு எப்போதும் தனக்குள்ளே பால்யத்தின் பசுமையோடு உட்கார்ந்திருக்கும் நண்பர்களையும் சந்தித்து விட வேண்டுமெனப் பரபரக்கிறது.

  நண்பர்களான சண்முகம், மாலைவெள்ளி, பார்வதி, சுபைதா, குண்டான் யாவருமே நமக்குமான நட்புகள்தானே. நினைவுகளூடே வளரும் நட்புகளுக்கிடையிலான இனிய சம்பாசணைகள் நாவல் வளர்ச்சிக்கு மட்டுமன்றி பாத்திரப் படைப்பிற்கும் பண்பு விளக்கத்திற்கும் பெருந்துணையாகிப் போகின்றன.

மேலும்

 கதைச்சூழலை மிக எளிமையாய் நமக்குணர்த்தி விடுகின்றன.

  ஆசிரியர் தன்னிலைக் கூற்றாய் கூறுவதைக் காட்டிலும் சிறு சிறு உரையாடல்கள் மூலம் நாவலை முன்னோக்கி நகர்த்தியிருப்பது சுவையைக் கூட்டுகிறது.

 தரிக்கும் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பழங்கதைகள். சிறையிருந்த சீதை கரிய நிறமுடைய எதைக் கண்டாலும் தன் காதல் கணவர் தோற்றமே நினைவுக்கு வரப்பெற்று வாடினாளாம். நினைவுத் தொடர் ( Association Statement) என்பதும் கூட ஒரு உளவியல் உண்மையல்லவா?

 மண்ணுக்குள் புதைந்த தேங்காய் மட்டைகளைத் தட்டித்தட்டிச் சிதைத்துப் பெற்ற நாரிழைகளைத் திரித்து அழகழகாய் கயிறு முடிவது போலே அடிமனசுக் புதைந்துபோன தன் பால்யகாலத்து பசுமை நினைவுகள் கொஞ்சங் கொஞ்சமாய் மேலெழத் தொடங்குகின்றன.

 பூத்துக் குலுங்கும் தாமரை தடாகமும்... ஊரின் பொக்கிசமான பட்டிப்பளை ஆறும் பச்சைப்பசேலெனும் வயல்வெளிகளும்... கனவுப் பள்ளத்தாக்கும் அவரின் நினைவுகளுக்கூடே நம்மையும் குளிர்விக்கின்றன.

 அதிலும் நமது நாவல் நாயகர் சிந்தனை வீரர்... செயல்சூரர் சாந்தமாமா தோழராய்... தலைவராய்... வழிகாட்டியாய் நமதும் பிள்ளைப்பருவத்து குருவாய் மனசுக்குள் நிறைந்தபோகிறார்.

 முதல் திரைப்பட அனுபவமாகட்டும்... நீச்சலடித்ததும்... சைக்கிள் ஓடப்பழக்கியதும் தானே படகாகி நண்பர்களை ஒவ்வொருவராய் முதுகில் சுமந்து பட்டிப்பளை ஆற்றைக் கடக்க செய்ததும் தன்னம்பிக்கையோடு அவர்களின் கனவுப் பயணத்துக்கு துணையிருந்ததும் அதிலும் சிட்டுக்குருவிகளாய் இவர்களோடு ஒட்டிப் பறந்த அந்தக் குட்டிப்பெண்களையும் பாசமுள்ள தாய்ப்பறவையாய் அரவணைத்துக் கொள்வதும்... ஓ... சாந்தமாமா நீங்கள் சொந்தப் பெற்றோருடன் வக்காத்து குளத்தை விட்டும் கிளம்பியநேரம் கவலை வெடித்து இரகசியமாய் இரவுகளில் அழுதது உங்கள் நண்பர்கள் மட்டுமல்ல... நாங்களும் கூடத்தான்.

  என்னவொரு அருமையான பாத்திரவார்ப்பு. சந்தமாமா வருமிடமெல்லாம் அபூர்வ ஒளிர்வுச்செறிவு அளவிட முடியாதபடி எம் மனசுக்குள் பரவுகிறது.

 இவ்வாறு சிறுமிகளும் ஆண் பிள்ளைகளோடு சேர்ந்து  விளையாடுவதும் காடு மேடெல்லாம் அவர்கள் கூட ஒன்றாக அலைவதும் இன்றைய பொழுதுகளில் சாத்தியமா? என்ற வினா ஒருவித நடுக்கத்தோடும் அச்ச உணர்வோடும் நம் முன்னே எழுகிறது.

 இதைவிடவும் அந்த நிலக்காட்சி வர்ணனைகள்...! ப்பாஹ்... இத்தனை தாவரங்களா... ? இத்தனை விலங்குகளா...? பறவைகளா..?

 என நம்மை வியக்க வைக்கும் உயிரியல் பல்வகைமைகளின் அதிசயங்களைக் கண்முன்னே உயிர்ப்போடு நிறுத்திப் போகிறது.  

  வக்காத்துக் குளம் மாநகரமாகிய பின்னர் அவை எங்கே போய் தொலைந்தனவோ என்ற விடையற்ற வினா மொத்த மனுக்குலத்தையுமே குற்றவாளிக்கூண்டில் நிறுத்திப் போகிறது.

  உண்மையில் இது தனியாய் ஆய்வு செய்யப்பட வேண்டிய பேரவலங்களில் ஒன்று.

 இதைப்போலவே இன்றைய டியூசன் கலாசாரத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடியோடு வழக்கொழிந்து போன நமது பிள்ளைப்பருவத்து சிறுவர் விளையாட்டுகளான "சாந்தமாமா எங்கே போகிறாய்... மாட்டுக்குப் போகிறேன்...! / மாமி மாமி பன்னாடை... / ஈரெண்டு புடிச்சேன்... / ஈசோல... ஈச்சோல.. / கண்ணாண்டே புன்னாண்டே... / ஆலையிலே சோலையிலே... /  புள்ளிப்பீங்கான் விளையாட்டு/ ஓ... குச்சுப்பெட்டி... நெருப்பட்டி /குச்சு குச்சு ரயில்பெட்டி/ சீன சர்க்கஸ் கம்பெனி விளையாட்டென அத்தனை விளையாட்டு முறைகளும் நண்பர்களுக்கூடாய் நமக்கும் உணர்த்தப்படுகின்றன. உண்மையில் இவ்விளையாட்டுக் காலமே நம் பொற்காலம் அல்லவா.

 நாவலின் நகர்வினூடே வக்காத்துக்குளத்திலும் மெல்ல நாகரீகம் பரவுகிறது. கட்டட அமைப்புகள், கல்வி மற்றும் வாழ்க்கை முறை யாவுமே நாகரீகத்தின் உச்சத்தை நோக்கிப் பயணப்பட்டாலும் அந்த நாகரீகம் மெல்ல மெல்ல மக்களின் அமைதியான மனநிலையை குலைத்துப் போகிறது எனும் பேருண்மை மறைமுகச் செய்தியாய் நமக்குப் புரியவைக்கப்படுகிறது.

 'அன்று அப்படி இருந்தது இன்று இப்படி ஆகிவிட்டதே' என்ற முரண்சுவையே ஒரு கருத்து அறிவிப்பு போல வந்து (Mere statement) அவலத்திற்கு அடிப்படையாகி அவரது உணர்வுகளை வாட்டுகிறது.

 படிப்பு, பரீட்சை, வேலை... வேறுநட்புக்கள்... வேறுதளம்... வேறுவேறு உறவுகள் என இருபது வருடங்களும்.. திருமணம்... மனைவி... பிள்ளைகள்... அதன் சுமைகள் என இன்னும் பல வருடங்களும் ஓடிக் களைத்து போகிறது இந்த விசித்திர வாழ்க்கை.

 இதற்கிடையே இந்த பால்ய நட்புகள் என்னவாகி போகின்றார்கள் என்பதைச் சொல்லவரும் ஆசிரியர் நாட்டு நடப்புகளையும் அது தொடர்பான தனது பார்வையையும் நமக்கு புலப்படுத்துகிறார்.

 பார்வதி பஸ்ஸில் குண்டு வெடித்தாலும் குண்டன் காத்தான்குடிக்குப் போகும் வழியில் குருக்கள்மடத்தில் கடத்தப்பட்டும், மாலைவெள்ளி இயற்கையின் சீற்றம் சுனாமியிலும் சண்முகம் விடுதலை இயக்கமொன்றுக்காய் போராடச் சென்று காணாமல்போயும்... சுவைதா வெளிநாட்டுப் பணிப்பெண்ணாய் அரபு நாடுகளுக்கு மாறிமாறி அலைந்ததில் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுமாய் இவ்வுலகை விட்டும் நிரந்தரமாய் மறைந்து போகிறார்கள்.

 மூன்று தசாப்தத்திற்கு மேலாக நாட்டைச் சீர்குலைத்த இனவன்முறைகளும், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவுகளும் இந்த அப்பாவி மக்களின் அமைதியான அன்றாட வாழ்க்கையை எங்கனம் சிதைத்தழித்தது என்பதை இந்த வாசிப்பினூடே உணர்ந்து கொள்கின்றபோது மனசு கனத்துப் போகிறது.

 கூடவே மதபேதங் கடந்து தமிழ் அரசினர் கலவன் பாடசாலையாக இருந்த ஒரு பாடசாலை காலவோட்டத்தில் பெயர் மாற்றப்படுவதனூடாய் தனிச்சமுதாயமாய் ஒடுங்கிப் போனதையும் போகிற போக்கில் பதிவாக்கியுள்ளார்.

 சரி.. எங்கள் நாவல் நாயகர்..  கனவுத்தோழர் சாந்தமாமா இறுதியில் என்னவாகிறார்...?

  அவரை சதக்காவான  கதைசொல்லி என்ன நிலையில் வாசகரை சந்திக்க வைப்பார்...?

 அந்த உன்னத வீரரைப் போதையுடன் கூடிய கனரகசாரதியாகவோ இல்லை வீதிக் கடையொன்றில் எடுபிடியாகவோ நாம் கண்டுவிட வேண்டாமே என்று வாசகரின் உள்மனசு பரபரக்கப் போவதைக் கதைசொல்லி எப்படித்தான் உய்த்துணர்ந்தாரோ தெரியவில்லை.

 'ஆசையை விட்டவர்களே எல்லாத் துன்பங்களையும் விலக்கி மோட்சமடைகிறார்கள்.' என்ற புத்தரின் இறைஞான வரிகளை அளவிறந்த ஆற்றலுடைய சாந்தமாமாவினூடாகவே நமக்குக் கதைசொல்லி புரிய வைக்கிறார் என்பதை மட்டும் இங்கே சொல்லி வைப்போம்.

 ஏழு வயதில் விளையாட்டாய் சந்தமாமா பாடிக்காட்டிய சிறுவர் பாடலொன்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை எழுபதுகளின் முழுமையாய் புரிய வைக்கிறார்.

 இதனூடாக இந்நாவலின் கதைப்பின்னல் (Plot) தத்துவச்சார்பு கொண்டதாகவே நம்மால் உணரமுடிகிறது.

  இந்நாவல் தரும் வாழ்க்கை பற்றிய மதிப்பீடு மிகத் துல்லியமானது. விசாலமானது.

 இனி எஞ்சிய காலமெல்லாம் வக்காத்துக்குளமும் அதன் நித்திய ஹீரோ சாந்தமாமாவும் நம் நினைவுகளுடன் கூடவே பயணப்படப் போவதைத் தவிர்த்திட முடியாது போலும்.

  வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

 எஸ். பாயிஸா அலி

கிண்ணியா

 


No comments:

Post a Comment