Sunday, February 18, 2024

கொல்வதெழுதுதல்.90 ’ நூலுக்கான முன்னுரை- எம்.எம்.எம். நூறுல்ஹக்

 

‘கொல்வதெழுதுதல்.90 ’   நூலுக்கான முன்னுரை- எம்.எம்.எம். நூறுல்ஹக்.

 

இலங்கையின் தமிழிலக்கியப் பாட்டையில் போர்க்கால இலக்கியங்கள், புலம்பெயர் இலக்கியங்கள்  என்பன விடுதலைப் போராட்டத்தின் பக்க விளைவான இலக்கிய வடிவங்களாக தோற்றம் பெற்றவையாகும்.

அந்த வகையில்,  ஆர்.எம். நௌஷாத் எழுதியுள்ள கொல்வதெழுதுதல்.90. என்ற இந்நாவலும்,  போர்க்கால இலக்கிய மரபை ஒட்டியதாக  பரிணமித்துள்ளது.  1990 ஆம் வருடகாலப் பகுதியில்  கிழக்கு இலங்கை முஸ்லிம்களின், கிராமங்களை  யுத்தத்தின் கோரக் கரங்கள் தட்டியபோது  அம்மக்களின்  அக்காலக் கையறு நிலையை  இலக்கிய வடிவமாக  வார்த்தெடுப்பதில்  இந்நாவல் ஓரளவு பங்களிக்கிறது எனலாம்.

இக்கதை 1990 களில் எழுதப்பட்டிருந்தாலும்,  எமது ‘முஸ்லிம் குரல்’ பத்திரிகையில், 2003 இல், ‘பள்ளிமுனைக் கிராமத்தின் கதை’  என்ற பெயரில்,  தொடராகப் பிரசுரம் பெற்றிருந்தது.  2003 இல்,  யுத்தம் தீவிரமடைந்திருந்த  சமயத்தில்,  முஸ்லிம் குரல் பத்த்ரிகையைத் துணிகர முயற்சியாகக் கொண்டு வந்தவர் நண்பர்  எம். பௌசர் ஆவார்.

அதன் ஆசிரியபீடத்தில், பணிபுரிந்த எமக்கு  விடுக்கப்பட்ட  அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும்  உயிராபத்தை  ஏற்படுத்த முனைந்த போது  ஏற்பட்ட நெருக்குவார நிலையில் கூட  முஸ்லிம் குரல் தனது  சமூகப் பணியை பொறுப்புடனும்  துணிச்சலுடனும்  தொடர்ந்தது.  இந்நாவல் தொடர்கதையாக  16.05.2003 முதல்  முஸ்லிம் குரல் சுவடு 10 இல் ஆரம்பித்து 26.12.2003 வரை  சுவடு 29 இல்  நிறைவு பெற்றிருந்தது.

பல்வேறுபட்ட ஆயுதக் கலாசாரங்கள்  தலைவிரித்தாடிய 1990 காலப்பகுதியில்  அவற்றுக் கெதிராகக்  கிழக்கிலிருந்து கிளர்ந்தெழுந்த ஒரு முஸ்லிம் தனித்துவ தலைமையின்  ஆகர்ஷிப்பில்  ஈர்க்கப்பட்ட  ஆயிரமாயிரம் இளைஞர்களில்  முத்துமுகம்மது என்ற  ஒருத்தனின்  அரசியல்-அன்பியல்-போரியல்  என்பன இந்நாவலில்  வெகு இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளன.

கிராமத்து வீதிகளில்,  வெறுமனே பாடிக்கொண்டு திரிந்த  இந்த இளைஞன்  வஞ்சிக்கப்பட்ட தனது  அன்பியலையும், வலிந்து திணிக்கப்பட்ட அரசியலையும்  அதனூடே,  தான்  அனுபவித்த  பயங்கரவாதத்தையும்  எதிர்கொண்டு  அவற்றினூடேயே  உரம்பெற்று  ஒரு பண்பட்ட அரசியல்வாதியாக பரிணமித்துத் தனது  பிரதேசத்துக்கான  ஊராட்சித் தலைவராகவும்,  அந்த மாவட்டத்துக்கே  ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும்  ஆன ஒரு  அசாதாரண நிகழ்வே  இந்நாவலின் கதைச் சட்டகமாக அமைந்துள்ளது.

ஒரு கிராமத்தின்  தேர்தல் கள நிலைவரங்கள், கொலைக்கள விபரங்கள் காதலுணர்வுகள்  ஆகியன வெகு யதார்த்தமாக  இதில் சித்தரிக்கப்பட்டுள்ளன.  அதேவேளை,  அப்பாவிக் கிராமத்து மனிதர்களின்  மனவியல்புகள்,  வர்ணனைகள், பேச்சோசைகள்,  என்பன கதையோட்டத்தின் ஊடே அற்புதமாகக் கையாளப்பட்டுமுள்ளன. நாவலாசிரியர்  ஒரு திறமையான கதைசொல்லி  என்பதை அவரது  எழுத்துக்கள் நிறுவியிருக்கின்றன.

எனினும், சற்றேறக்குறைய அதே காலப்பகுதியில், காத்தான்குடி, மூதூர் பள்ளிவாசல் படுகொலைகள், இந்திய அமைதிப்படை வெளியேற்றம், விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி  போன்ற பல நிகழ்வுகள் பற்றி  இந்நாவலில்  அழுத்தமாகப் பதியப்படவில்லை  என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயின், போர்க்கால இலக்கியம் பற்றிய  பகிர்தல்களின் போதும், இலங்கையின் போரியல்  பற்றி அறியாத தமிழக வாசகர் மத்தியிலும்  தனது போர்க்காலப் புதினத்தை  இந்நாவல்  அழுத்தமாகப் பதிவு செய்யும்  என்பதில் சந்தேகமில்லை.

நாவலாசிரியரின்  எழுத்துப் பணிக்கு  எனது  மனமார்ந்த பாராட்டுதல்கள் உரித்தாகுக.

 

ஹாதிபுல் ஹுதா, பன்னூலாசிரியர்,

எம்.எம்.எம். நூறுல்ஹக்

(முன்னாள் பிரதி ஆசிரியர். முஸ்லிம்குரல்)

சாய்ந்தமருது

01.11.2013 .

No comments:

Post a Comment