Thursday, December 28, 2023

ஜமீல்

 

காலத்தை எச்சரிக்கும் ஜமீலின் கவிதைகள்..

 

காலம் ஒரு வேட்டை விலங்கு.. அதைக் கையில் பிடித்துக் கொண்டு, கவிதைக் காட்டுக்குள் அலைகிறார் ஜமீல்..அது வேட்டையாடிக் கொண்டுவரும் சொற்களைச் செறிவாக்கம் செய்து புதுப்புது படைப்பினம் செய்வது அவரது இயல்பு..

 

ஜமீலின் வேட்டை அனுபவங்கள், மானுடரின் வாழ்வியலோடு ஒத்திசைவு கொள்ளும் போது, பல நல்ல அறுவடைகள் உற்பவிக்கின்றன.. அந்த அறுவடைகளை இந்நூல் வாயிலாக தமிழ் வாசகப் பரப்புக்கு தந்திருக்கிறார்..

 

 

அவர் தனக்கு வாலாயமான மொழி வளத்தைக் கொண்டு, விசாலித்த  கவிதைவெளியில் எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறார் என்பதும்,  அவர் எட்ட முயலும்  மானுடவியலின் அகக் கூறுகள் பற்றியும் இந்நூலில் உள்ள கவிதைகள் மூலமாக நம்மால் முழுவதுமாக அனுமானிக்க முடியாதெனினும், அவரது அகவீச்சின் எல்லையை நிச்சயம் உணர முடிகிறது..

 

ஜமீலின் கவிதைகளை வாசகர் உள்வாங்கும் போது, ஏற்படுகின்ற அருட்டுணர்வுகள், புது வகையான மனப் பரவசம் தருபவை. வாழ்வியலின் இழி நிலைகளை அதட்டுபவை.. பரிதாபமிக்க உயிர்களுக்கு தலை தடவி ஆதரவு அளிப்பவை.. வாசக மனங்களோடு அந்தரங்க உரையாடல் செய்பவை...

 

 

அவர் கவிதை சொல்லும் முறைமையில், நெடுகிலும் தூவியுள்ள ஓர் ஈர்ப்புணர்வு நமது மனதிலும் தொற்றிக் கொள்கிறதா என்றால், இந்நூலை வாசித்து முடித்த பின், ஜமீல் நம்மில் நிறைந்து நிற்கிறார் என்பதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது..

 

அவர் சொல்ல விரும்புவதை வெறுமனே  மொழியின் உணர்ச்சிக் குழம்பில் தோய்த்துச் சொல்லிவிட்டுப் போவதில்லை. அது நுகர்வோரின் மனதில் பதியமிட, ஆரோக்கியமான சொல்விதைகளை தேர்ந்தெடுத்து விதைத்து விடுகிறார். நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நம்மோடே நடந்து வருகிறார்.

 

 

காலம் என் இலைகளை உதிர்த்தி

நிர்வாணமாக நிற்பதற்கிடையில்

என் சடைத்த கரங்களில்

அழையா விருந்தாளிகளாக

பறவைகள் வந்தமர்வதைப் போல்

வழிப்போக்கர்கள் வந்து

காலாறிச் செல்வதைப் போன்று

ஒரு அடைமழை நாளிலாவது

நீயும் என்னில் ஒதுங்கி

உன் ஆதி மௌனம் உடைத்து

என் தவத்தைக் கலைத்து விடு...

(நின் தரிசிப்பில் கலையுமென் தவம்)   -

 

என்று தன் எல்லையற்ற நேசத்தை சொல்லுகிற போதும்,

 

என் வீட்டைத் தரிசித்து

எதுவுமற்றுத் திரும்பிச் செல்லும்

ஒவ்வொரு முறையும்

எனக்குள் ஒரு வானம் விரிகிறது...

(எனக்குள் விரியும் வானம்)- 

 

என்று தன் ஆற்றாமையை விகசிக்கும் போதும், அவரது கவிதைவானம்’ முழுவதிலும் அவரது விரிவு வெளியை தரிசிக்கலாம்...

 

 

தோழர் ஜமீல் பேசும் கவிதை  மொழி மிக நூதனமும் நுட்பமானதுமுமாகும். உணர்வுகளைப் பாவோடும் பாங்கில் அவரது கவிதை வரிகள், நம் மனதோடு ஊடுருவி, இயைந்து செல்கின்றன.. அதே சமயம் வாழ்வின் உக்கிரக் கணங்களை காட்சிப்படுத்தும் போது, ஜமீலின் எழுத்துக்கள். வெறி கொண்டு பாயும் வேட்டை விலங்கு போல அவரையும் மீறிப் பாய்கின்றன....

 

‘’என்னோடு வந்த நிழல்/ எங்குதான் சென்றிருக்குமோ../ அறைக்குள் நுழைந்த பிறகுதான்/ தேடிப் பார்க்கிறேன்/ கூட வந்த நிழலைக் காணவில்லை/ இப்போது, அறையில்/ துணைக்கு யாருமின்றி/ தனியாக இருக்கிறேன்/ திரும்பிச் செல்லும் வரை/ வெளியில் காத்திருக்கின்றதா என்ன../ 

 

‘காத்திருக்கும் நிழல்’ என்ற மேற்படி கவிதையில், கவிஞர் உடலும், உயிரும் ஒத்திசைவு கொள்ளும் நிலையை கேள்விக்கு உள்ளாக்குகிறாரா அல்லது, ஒரு மாயப் புனைவை வாசகரின் சிந்தனைக்கு முன் வைக்கின்றாரா என்ற ஒரு மயக்கில் ஆழ்த்தி விடுகிறார்..

 

காலம் தன் வேட்டையை நிறுத்திவிட்டால் இவ்வுலகம் மனிதர்களின் வனம் ஆகி விடும் என்பது ஜமீலின் யதார்த்த வாதம்...அதே சமயம் இரவுகளை வேட்டையாடும் பூனைகளோடு ஊடல் கொள்வதும் அவரது மிகை யதார்த்தம் ..

0

கவிதை என்பது கலை இயலில் இருந்து விடுபட்டு அறிவியலுக்குள் வருகின்ற இக்காலத்தில், வெறுமனே புராதன சொற்களைக் கோர்த்து மாலை கட்டுதல் ஜமீலின் வேலை அல்ல,.என்பதை இந்நூல் வாயிலாகப் பலமாக நிரூபித்திருக்கிறார்.  நிர்வாணமாக அலையும் காற்றுடன் சேர்ந்து வாழ்வியலின் நுட்பமான மகரந்தங்களை தேடிச் சேகரிப்பதும் அவற்றைக் கவிதைகளுக்குள் செலுத்திப் பரீட்சிப்பதும் அவரது அறிவியல்  தவம்.  இதனால் அமைதியான நூலகத்தினுள் அமைதியற்ற நூல்களை இனங்காணவும், உலகத்தைச் சுற்றிக் காட்டிய நூலகத்துடன் நேசமாக இருக்கவும் இவரால் முடிகிறது..

 

தேவையை முறையிட வணக்கஸ்தலத்துக்கு வருபவனிடம் தம் தேவையை யாசிப்போர், பெரும் காட்டை தனக்குள் பதுக்கி வைத்திருக்கும் ஒரு சிறு விதை, என்று, பலரும் பார்க்கத் தவறுகிற பக்கங்களை இந்நூலுக்குள் அடக்கியுள்ள ஜமீலின்உற்சாகமான கவிதை மொழிநூலின் பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்சி, அதன் ஒளியில் நம்மை ஒவ்வொரு பக்கமாக அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் ஓர் உலகத்தை திறக்கிறது..கவிதைகளுக்குள் ஒழிந்திருக்கும் அறிவியலை அறிமுகம் செய்கிறது... தன்னுடைய புனைவு வெளியில், தனக்குரிய கவிதைமொழியை சுதந்திரமாக அலைய விடுகிற ஜமீல் தன் அறுவடையை முழுமையாகப் பெற்றுக் கொள்கிறார்.

 

மேலும், அவரது, கவிதைகளுக்குரிய படிமக் கூறுகளை எடை போடவும், நுணுகி ஆராயவும், வேறொரு கதவு திறக்கப்படல் அவசியம். எதிர்கால ஆய்வுப் பெருவெளியில் அது சாத்தியமாகக் கூடும்.

 

என்னைப் பொறுத்தவரையிலும், ஜமீலின் கவிதைகளை கையில் பிடித்துக் கொண்டு, காலம் என்ற வேட்டை விலங்குடன், காலாதி காலமாக கதைத்துக்கொண்டு இருக்கலாம்.

இதுவரை 11 கவிதை நூல்களை தந்தவரும், கவிதைக்காக, கடந்த வருடம், அரச தேசிய சாஹித்திய விருது பெற்றவருமான, தோழர் ஜமீல் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

 

--- தீரன்.ஆர்.எம். நௌஷாத்.

2023.12.10

 

 

 

 

கவிதைகளின் வழியே நின்று காலத்தை எச்சரிப்பதும் தனது வாழ்வின் கேள்விகளை தொடுப்பதும் வாலிபத் தெருவில் நின்று எம் காதல் பாட்டுகளை பதிவதுமாய் முழுக்க முழுக்க உணர்வுகள் நெய்த எழுத்துக்கள் இறையாளின் எழுத்துகள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இலக்கிய படைப்புகள் இருவழி தொடர்புள்ளவை. எழுத்தாளனின் உள்ளத்தில் இருந்து விரியும் கற்பனையும் அனுபவமும் வாசகனுக்கு மெய்நிகர் வாழ்க்கை அனுபவமாகிறது. இலக்கிய பிரதியின் வழியே படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் அந்தரங்க உரையாடல் நிகழ்கிறது. அந்த உரையாடலின் வழி வாசகன், எழுத்தாளன் காட்டும் அனுபங்களை மென்மேலும் விரித்துக் கொள்ள முடிகிறது. படைப்பிலிருந்து பெரும் அனுபவங்களும் திறப்புகளும் வாசகனின் வாழ்க்கை அனுபவங்களோடு உரசியும் எதிர்த்தும் செறிவாக்கம் பெருகிறது.  இந்தச் செறிவாக்கத்தின் வெளிப்பாடே இலக்கிய விமர்சனமாகின்றது.

ஓர் இலக்கிய படைப்பை வாசகன் உள்வாங்கும் முறையை நாம் விமர்சனம் என்று குறிப்பிடுகிறோம். அது ஒரு வாசிப்பு முறை. இலக்கிய விமர்சகர் என்று தனித்த பிரிவினர் யாரும் இல்லை. தேர்ந்த வாசகர் எல்லாரும் விமர்சகர்தான். இதன் காரணமாகவே இலக்கிய பரப்பில் எழுத்தாளர்களே விமர்சகர்களாகவும் செயல்படுகின்றனர். ஆனால் இலக்கிய விமர்சனம் செய்ய நேர்மையும் நுண்ணிய வாசிப்பும் தேவை.

மலேசிய இலக்கிய வெளியின் போதாமைகளில் தலையாயது விமர்சனங்கள் அற்ற சூழலாகும். இங்கு நீண்ட காலமாகவே இலக்கிய விமர்ச்னங்கள் மீது எதிர்மறை பார்வை வைக்கப்படுவது தீயூழ் என்றே கூறவேண்டியுள்ளது. ரெ.கார்த்திகேசு, சை.பீர்முகம்மது போன்று நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் கூட போதிய அளவு விமர்சிக்கப்படாத நிலையையே இங்குக் காணமுடிகிறது.  நூல் வெளியீட்டு மேடையில் சடங்காகப் பேசப்படும் புகழ்ச்சிகளும்  மேலோட்டமான குறிப்புகளும் மட்டுமே படைப்பாளியின் உழைப்புக்கு கிடைக்கும் விமர்சன அங்கீகாரமாக இருப்பது அவலம். உண்மையில் கறாரான விமர்சனம் செய்யப்படாதப் படைப்பு வாசகனைச் சென்று சேராத படைப்பு என்பதே பொருள்.

ஆனால், இலக்கிய விமர்சனம் என்பதை வசை சொல்லாகவே புரிந்து கொண்ட பலரும் அதை தவிர்க்க நினைப்பது வெளிப்படை. படைப்பாளிகள் விமர்சகன் வைக்கும் கூர்மையான அவதானிப்புகளை ஏற்க முடியாமல் அவற்றை முற்றாக புறக்கணிப்பதும், படைப்புகளில் காணப்படும் போதாமைகளுக்கு தங்கள் அளவில் சில வெற்று சமாதானங்களைச் சொல்லி கடந்து செல்வதும் இயல்பாகிறது. மேலும் விமர்சனம் என்பது எழுத்தாளனின் படைப்பூக்கத்தை கெடுக்கும் செயல் என்ற தவறான புரிதலும் உள்ளது. இதன் காரணமாகவே மலேசிய இலக்கியம் இத்தனை ஆண்டுகளிலும் தனித்த அடையாளங்களின்றி, எழுதப்படுவன எல்லாமே இலக்கியம்தான் என்ற தட்டையான புரிதலை கொண்டிருக்கிறது. தெளிவாக சொல்வதென்றால், படைப்புகளில் எது இலக்கியம் எது இலக்கியம் அல்ல என்று தெரிவு செய்து சொல்லும் உரிமை வாசகனுக்கு உள்ளது. அந்த உரிமையை மீட்டெடுத்துக் கொடுக்கும் பணியையே இலக்கிய விமர்சனம் செய்கிறது.

இந்நூலில் மலேசிய நவீன இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு செய்திருக்கும் பத்து படைப்பாளிகளின் படைப்புகளை இலக்கிய விமர்சனத்திற்கு உட்படுத்தியிருக்கிறேன். இயல்பாகவே இக்கட்டுரைகள் படைப்பளிகளின் கால வரிசைப்படி அமைந்திருப்பது எதிர்ப்பாராதது. இது படைப்பாளிகளை தரவரிசை செய்யும் முயற்சி அல்ல. மேல் கீழ் என்று படைப்புகளை அடுக்கும் பணியும் அல்ல.  படைப்பாளர்கள் அவரவர் வெளியில் சென்றிருக்கும் தூரங்களையும் நிரப்பப்படாத காலி இடைவெளிகளையும் ஒரு வாசகனாக கண்டு சொல்வது மட்டுமே இந்நூலின் நோக்கம். எனக்குள் படைப்புகள் நிகழ்த்திய எதிர்வினைகளை நேர்மையாகவே பதிவு செய்துள்ளேன்.  இக்கட்டுரைகள் அனைத்தும் என் வாசிப்புக்கும் புரிதலுக்கும் உட்பட்டவை மட்டுமே. முடிவான வரையறையன்று. இவை ஒரு உரையாடலுக்கான தொடக்கம்தான். வாசகர்கள் இக்கட்டுரைகளில் குறிப்பிடப்படும் படைப்புகளை வாசித்து சுயமான விமர்சனப் பார்வையை முன்வைப்பதை வரவேற்கிறேன்.

முடிவாக, இக்கட்டுரைகளில் சில கடந்த ஆண்டு வல்லினம்100 தொகுப்புக்காக எழுதப்பட்டவை. புதிய கட்டுரைகளும் உள்ளன. இக்கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளிக்கொணரும் வல்லினம் பதிப்பகத்திற்கு யாவரும் பதிப்பகத்துக்கும் நன்றி.

ஓஓஒ

இறையாள் பேசும் மொழி மிக மென்மையும் சாதுர்யமுமானது. கவிதைகளின் வழியே நின்று காலத்தை எச்சரிப்பதும் தனது வாழ்வின் கேள்விகளை தொடுப்பதும் வாலிபத் தெருவில் நின்று எம் காதல் பாட்டுகளை பதிவதுமாய் முழுக்க முழுக்க உணர்வுகள் நெய்த எழுத்துக்கள் இறையாளின் எழுத்துகள்.

 

௦௦௦௦

வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு, அதைத் தான் கண்ட உக்கிரத்தில் சற்றும் குறைக்காமல், சமரசம் செய்யாமல், அனுபவத்திற்கும் பொருந்திப் போகிற வார்த்தைகளைத் தேர்வு செய்யும் கவிஞனைப் புரிந்துகொள்ள வாசகன் திறந்த மனத்துடன் இருக்கவேண்டும் என்ற பிரம்மராஜனின் வரிகளைக் கவிஞர் கருணாகரனின் கவிதை மொழிக்குள் நுழைவதற்குமுன் மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

 

 

ஒரு கவிதையின் புரியாத்தன்மை என்பது, அந்தக் கவிதையைப் படைத்த கவிஞனிடத்திலும் இல்லை. அந்தக் கவிதையிலும் இல்லை. அதற்கு மாறாக, வாசகர்களாகிய நம்மிடையேதான் இருக்கிறது என்ற புரிதல் முதலில் இங்கு அவசியமாகிறது. மேலோட்டமான நமது பார்வையும் துல்லியமிழந்த நமது தெளிவும் தர்க்கமும்தான் நம்முடைய புரிதலுக்குச் சவாலாக இங்கு விளங்குகின்றன. சமகால கவிதைப் படைப்பாக்கங்களின் புதிய பரிமாண வளர்ச்சியில் போதுமான நுகரல்கள் இல்லாமையும் இதற்கு ஒரு காரணியாக இருக்கலாம்.

 

 

ஒரு கவிஞன், தன் உணர்வு நிலையிலிருந்து சிறிதும் விட்டுக் கொடுக்காமல் முழுமூச்சாக நுண்ணியமான ஒன்றை மொழியிலும் சிந்தனையிலும் தேடிப்போகிறான். இந்தத் துல்லியமான பார்வையின் நிர்ப்பந்தங்கள் சம்பிரதாயமான மொழி வெளிப்பாட்டு எல்லைகளைத் தாண்டி விரைந்துசென்று புத்தம்புதுச் சொற்களையும் சொல்லாடல்களையும் அதற்கான புதிய அர்த்தங்களையும் கண்டு சொல்வதில் நிறைவு கொள்கின்றன. மேலும்,  கவிஞன் தன் சுயத்திற்காகப் புதிய வடிவங்களைத் தேடிச் செல்லும்போது சமூக வெளி (Social Space) தனிமனித வெளி (Private / Inner Space) ஆகிய இரு வெளிகளுக்கும் இடையில் நிலவும் சொல் வெளியை (Verbal Space)  நாடி அவனுக்குள்  அவனே நுழைந்து உள்ளிருக்கும் மொழிக்கிடங்குகளில் தனக்கான இயல்பு மொழியோடு சரணடைகிறான். இந்தச் சொல் வெளியில்தான் கவிஞன் தன் புலனறிதல் பார்வைகளைத் தனக்கே உரித்தான வகையில் அமைவுகளாக (Pattern) ஆக்கிக்கொள்கிறான்.

 

 

கவிதையும் மனிதனின் அறிவுத் துறைகளில் ஒன்று என்பதைப் பலர் அறிவதில்லை. கவிதை என்றால் படித்த அடுத்த நிமிடமே புரிந்துகொள்ளப்படவேண்டும் என்றும் வாதிடுகின்றனர். கவிதை செய்தித் தாளில் வரும் ஒரு செய்தியல்ல. வாசித்தவுடனேயே புரிந்துகொள்வதற்கு. அது ஒரு தவ உச்சத்தின் பிறப்பு. அதன் புற அமைப்புகளான வாக்கியத் தொடர்களில் முழு ஈடுபாடில்லாமல் வாசிக்கப்பட்டால் அக்கவிதையின் ஆரம்ப அர்த்தம்கூட புரிந்துகொள்ள முடியாததாய்ப் போகும். அந்நியப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து வரும் மனிதர்களின் கவிதைகளைப் புரிந்துகொள்ள அவர்கள் எழுதிய மனோநிலைக்கு அருகாமையில் வாசகன் செல்வது இங்கு அவசியமாகிறது.

 

 

 

நவீன கவிதை என்பது ஒரு நவீன ஓவியத்தைப் போலவே பற்பல அர்த்தங்களையும் புரிதல்களையும் விளக்கங்களையும் தர வல்லது. கவிதையின் ஒரு வரியில் இடம்பெறும் இரண்டு சொற்களுக்கு முன்பு இல்லாத அர்த்தத் தொடர்புகள் வாசகனின் வாசிப்பில் அந்தச் சொற்களைப் பற்றிச் சேமித்து வைத்திருக்கும் அனுபவத் தொடர்புகளால் கிடைக்கின்றன. இதனால், கவிதையின் பொருள் அடுக்குகளில் தீவிரம் ஏற்படுகிறது.

 

 

கவிதையின் அழகியலைப் பற்றிக் குறிப்பிடுகையில் கவிதையின் தன்மையும் அதன் செயல்பாங்கும் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறப்படுகிறது. மேலும், கவிதை புரிந்துகொள்ளப்படும் விதமும் கவிதையின் மொழியும் வாசக மனத்திற்குள் அக்கவிதை இயங்கும் இயல்பும் பாடுபொருள் சாத்தியப்பாடுகள் என பலவும் இணைந்து மனக்குவியத்தின் சொற்கோவைகளை நவீன கவிதைகளின் அழகியலாக வெளிப்படுத்திக்கொள்கின்றன. இவ்வகைக் கவிதைத் தோரணங்களே இக்கவிதைத் தொகுப்பு முழுவதும் உங்களின் வாசிப்பிற்காகவும் புரிதல்களுக்காகவும் நம் மண்சார்ந்த அடையாளத்தோடு வரிசைப்பிடித்து நிற்கின்றன.

 

 

இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் அதற்கென உரிய சுதந்திரமான வாழ்க்கையைக் கொண்டு புனையப்பட்டுள்ளது என்பதும் மேலும், இக்கவிதைகள் உணர்த்துவது நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பல வாசிப்புப் படிநிலைகளில் சொற்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு வாசகனுக்குள் நுழைந்து வாழ்வின் அனுபவ அடுக்குகளுக்குள் பிரவேசிக்க வைக்கின்றன. இக்கவிதைகள் வெறும் மொழியின் விளையாட்டுகளை மட்டும் சார்ந்து நிற்காமல் ஆழ்ந்த தெளிவாகவும் ஆழ்மன உணர்தலாகவும் எல்லா விதமான நுண் அரசியலின் புரியாமைகளாகவும் எளிமையான அழகியலாகவும் நவீன தமிழ்க் கவிதையின் வடிவங்களாக நமக்கு அறிமுகமாகின்றன.

 

 

அடுத்து இத்தொகுப்பிலுள்ள ஒரு கவிதையைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். அடுத்தடுத்த கவிதைகளை உங்கள் பார்வையில் நீங்கள் புரிந்துகொள்ள இது ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன்.

 

 

வாழ்வின் நிலையாமையை மிகவும் எளிய கவிதை மொழிநடையில் சொல்லிச் செல்லும் கவிதை இத்தொகுப்பிலுள்ள, தொலைந்து போன நான் எனும் கவிதை. இக்கவிதையை யதார்த்தத்திற்கும் கனவுக்கும் இடையிலான சர்ரியலிசக் கவிதையாக வகைப்படுத்தலாம். படைப்பாளன் தன் உணர்ச்சி மேலிட்டால் உருவமைக்கும் சொற்களுக்குப் பொருள் தேடுவது என்பது மிகவும் எளிதல்ல. சிலருக்கு அது எளிதில் சென்றடையும். பலருக்கு பல வாசிப்புகளின் மூலம் சென்றடையலாம். சிலருக்கு விளக்கம் கொடுத்த பிறகு சென்றடையலாம். ஓரிருவருக்குக் கடைசிவரை புரிந்துகொள்ள முடியாததாகவே போகலாம். எது எப்படி இருப்பினும் படைப்பாளனின் அந்தக் கணநேர உணர்ச்சிப் பிழம்புகள் வெவ்வேறு புரிதல்களை வாசிப்பவனுக்கக் கொடுத்துச் செல்வது நவீன படைப்பாக்கத்தின் ஓர் உச்சக் கூறாகும்.

 

 

இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கும்? இதுவரை விடை தெரியாத ஒரு கேள்வி இது. இக்கேள்விக்கு விடை காண பல ஞானிகளும் சித்தர்களும் தீவிரமாக முயன்றிருக்கிறார்கள். புத்தரும் வாழ்வின் அர்த்தத்தைத் தேடி ஞானம் பெற்றார். வாழ்க்கை நெறிக்கான பல விசயங்களைப் போதனையாகச் சொல்லிச் சென்றார். மறுபிறப்பு என்பது கர்மவினைகளுக்கு ஏற்ப விளையும் என்பதும் பலரின் நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. எது எப்படி இருப்பினும், இறப்புக்குப் பிறகு என்ன? என்பது இந்த நிமிடம்வரை புரியாத புதிர்தான். ஆனால் அந்தப் புதிருக்கு ஒரு கவிமனம் விடை காணத்துடித்துத் தன் கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு தானும் பறக்க ஆரம்பித்துவிட்டது ஒரு விடுதலை உணர்வேந்தலுடன்.

 

 

சிறகுகள் முளைக்கப் பறந்து கொண்டிருக்கிறேன்/இதமாக வருடிப்போகும் காற்று/மேகக் கூட்டத்தில் குளிர்/நட்சத்திரக் கூட்டத்தில் நான்/வெளிச்சம் பரவி வெளிச்சமாகிறேன்/ரொம்ப கிட்டத்தில் நிலவின் ஒளி/நான் பறந்துகொண்டிருக்கிறேன்/

 

 

இவ்வரிகளே இக்கவிதையின் உச்சங்கள். காட்சிப் படிமக்கூறுகள் இறப்பிற்குப் பின்னும் முன்னகர்ந்து விரிகின்றன. இவ்வுலகில் வாழ்ந்துகொண்டு வாழாத வாழ்க்கைக்குள் நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கின்றன இவ்வரிகள்.

 

 

பறக்கும்போது ஏற்படும் அந்த உணர்வை இதமாக வருடிப்போகும் காற்றோடு ஒப்புமைப்படுத்திச் சொல்லியிருப்பதும் மேகக் கூட்டத்தில் குளிர் என்பது மழையை மடியில் வைத்து அலைந்துகொண்டிருக்கும் மேகங்களுக்கு இடையில் நாம் பறக்கும்போது ஏற்படும் சில்லென்ற உணர்வையும் நட்சத்திரக் கூட்டத்தில் நான் வெளிச்சம் பரவி வெளிச்சமாகிறேன் என்பது ஆத்மா இப்பிரபஞ்சத்தோடு ஒன்றிணைந்து விடுவதைக் குறியீடாகக் காட்டுவதாக நான் புரிந்துகொள்கிறேன். இறப்பிற்குப் பின் இருக்கும் அந்த இருண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு விடயமாகவே இக்கவிதையைப் பார்க்கிறேன்.

 

 

பறக்கப் பறக்க/ இறகுகள் உதிர/ பறந்துகொண்டே கீழே பார்த்தேன்/

 

 

பறக்கப் பறக்க இறகுகள் உதிர்வது எதை உணத்துகிறது என என்னை நானே கேட்டுக்கொண்டேன். இறுதிவரை பறக்க இயலாத ஒன்றாகவும் தன் இலக்கை நோக்கி அடைய முடியாத ஒரு மயக்க நிலையாகவும் இவ்வரிகள் தோன்றம் அளிக்கின்றன. இறகுகள் எல்லாம் உதிர்ந்துபோனால் அதன் பிறகு எங்கணம் பறப்பது? அதையம் மீறி பறப்பதுதான் கவிஞனின் கற்பனா சக்தி. இங்கேதான் கவிதையும் வாழ்கிறது. நிஜ வாழ்க்கையில் சாத்தியப்படாத அல்லது நிறைவேற்ற இயலாமல் போனவற்றிலிருந்து விடுபடுவதின் குறியீடாகவே இவ்வரிகள் புலப்படுகின்றன.

 

 

ஒரு சராசரி மனிதனின் அன்றாட வாழ்க்கையைக் கவிதையின் ஆரம்பம் தொட்டு மிக இயல்பாகப் படம்பிடித்துக் கொண்டு போகும் கவிஞனின் கவிமனம், மெல்ல மெல்ல தனக்கான இலக்கை, தன் அனுபவம் சார்ந்த வாழ்வியலோடும் அது சார்ந்த நெருடலுடன், தான் சொல்ல வந்ததை நோக்கி மிக நேர்த்தியாக நகர்ந்திருப்பது இக்கவிதையின் சிறப்பாகும். எளிய சொல்லாடல்களும் காணோம்’, ரொம்ப கிட்டத்தில் போன்ற பேச்சு வழக்குச் சொற்களும் கவிஞன் வாசகனைத் தன் வசப்படுத்தவும் நெருக்கமாக உரையாடவும் மேற்கொண்ட ஓர் உத்தியாகவே அமைந்திருக்கிறது எனலாம். மேலும் இதுபோல பல கவிதைகளிலும் பேச்சு வழக்கு மொழியாடல் கையாளப்பட்டுள்ளது இந்நூலுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

 

 

ஒவ்வொரு கவிதைக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட, ஏன் ஆயிரக்கணக்கான அர்த்தங்கள் இருக்கமுடியும் என்று தனது கவிதை பற்றிய உரையில் கூறியுள்ளார் Scotus Eregena என்கிற ஐரிஷ் இயற்கை இறையியல் வாதி. நாம் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதே இங்கு நிதர்சன உண்மையாகும். நம்மிடையே ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்யப்படும் ஒவ்வொரு முறையும் கவிதைகளின் அர்த்தங்கள் புதுப்பிக்கப்படுகின்றன என்கிறார்கள். எனவேதான், கவிதையின் புரிதல் என்பது ஒருவர் உணர்ந்தறிய வேண்டிய ஒன்று என்றும் கூறப்படுகிறது.

 

 

இவ்வாறாக, ஒவ்வொரு கவிதைக்குமான தங்களின் சுயமனப் புரிதலோடு தம் சுய அனுபவம், வாழ்பனுபவம் சார்ந்து நுணிகி அணுகினால் எம். கருணாகரனின் ஒவ்வொரு கவிதைகளையும் வாசகர்கள் மிக எளிதாகச் சென்றடையலாம். இனிய நண்பர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் எம். கருணாகரன் அவர்கள் இலக்கிய வானில் தனி அடையாளத்துடன் மேன்மேலும் சிறப்பாகத் திகழ்ந்திட அன்பு வாழ்த்துகள்.

 

 

நவீன கவிதைகளின் புதியதொரு வடிவங்களோடு மலேசிய இலக்கிய உலகில் வலம் வரும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் நமக்காகப் பேசுகின்றன. நமக்காகக் கோபப்படுகின்றன. நமக்காக அழுகின்றன. நமக்காகக் காயப்பட்டுக்கொள்கின்றன. நமக்காக நம்மையே சில வேளைகளில் நையாண்டியும் செய்கின்றன. நமக்காக நம்மை நோக்கியே கேள்விகளையும் எழுப்புகின்றன.  நம் இயலாமையை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. நம் அறியாமையை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நம் சுயத்தை நோக்கியும் நம் அடையாளத்தை நோக்கியும் நம் தேடலை நகர்த்துகின்றன.

 

 

நிறைவாக, கவிதைகளில் வரும் ஒவ்வொரு சொற்களும் சிறகு முளைத்துப் பறக்கின்றன. அவைகளுடன் நாமும் பயணிப்போம். ஒவ்வொரு சிறகும் ஒரு சரித்திரம் சொல்லும்.

 

நாளைய பொழுது நமக்காக விடியட்டும்

 

அன்பு வாழ்த்துகளுடன்

 

எம். சேகர்