Sunday, February 18, 2024

நட்டுமை நூலுக்கான முன்னுரை- எம். ஏ. நுஃமான்

 

நட்டுமை நூலுக்கான முன்னுரை- எம். ஏ. நுஃமான்

 

நட்டுமை’ என்பது பொது வழக்கில் இல்லாதஒரு விவசாயக் கலைச்சொல். கிழக்கிலங்கை அம்பாறை மாவட்ட முஸ்லிம் விவசாயிகள் மத்தியில் இச்சொல் வழக்கில் உண்டு. ஒரு வயலில் கட்டிவைத்த நீர் வரம்பு களில் உள்ள வெடிப்புகளால் அல்லது வேறு துளை களால் வயற்காரன் அறியாமல் அடுத்த வயலுக்குள் கசிந்து இறங்குவதை இது குறிக்கும். ‘நட்டுமை போயிருக்கு’ என்றால் வயல் நீர் களவாக அடுத்த வயலுக்குள் இறங்கியிருக்கிறது என்று பொருள். ஆண் பெண் இடையிலான கள்ள உறவைக் குறிப்பதற்கும் இச்சொல் உருவகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

இச்சொல் வழக்கைப் பயன்படுத்தி, ‘நட்டுமை போகவில்லை’ என்ற தலைப்பில் காலஞ்சென்ற கவிஞர் நண்பர் பஸீல் காரியப்பர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். போடியார் தன்னைப் பெண்டாள நினைப்பதை மனைவி தன் கணவனிடம் கோபத்துடன் முறையிடுவதாக அமைந்த கவிதை அது.

கொள்ளையாக் கதைச்சாங்கா அந்த ஆள்

கோபம் என்டா பத்திக்கு வந்திச்சு

பிள்ளை ஒன்டுக்கும் சுகமில்லையாம் - அவன்ர

பொண்டாட்டியும் அவட உம்மாட்ட போறாவாம்

வெள்ளிக் கிழமை அதுதான் நாளைக்கு மத்தியானம்

வீட்ட வரட்டாம் ஒரு வேலை இருக்காம்

கள்ளச் சிரிப்பும் அவன்ட கால்ல ஒரு சப்பாத்தும்

வெள்ளாமைக் காரன் பொண்டாட்டி எண்டா என்ன

வேசி எண்டா இந்த நாய் நெனச்சான்

என்று முடிகிறது அந்தக் கவிதை. மட்டக்களப்பு முஸ்லிம் களின் பேச்சுத் தமிழில் போடியாரின் ஆசைக்குப் பணியமறுக்கும் ஒரு பெண்ணின் குரலாக அமையும் இந்தக் கவிதைக்கு ‘நட்டுமை போகவில்லை’ என்று தலைப்பு வைத் திருக்கிறார் கவிஞர். மட்டக்களப்பு முஸ்லிம்களின் பேச்சு வழக்கு அறியாதவர்களுக்கு இந்தத் தலைப்பும் கவிதையும் புரிவது சிரமம்தான்.

தீரன் நௌஸாத்தின் ‘நட்டுமை’ குறுநாவலைப் படித்த போது பஸீல் காரியப்பரின் இந்தக் கவிதை ஞாபகம் வந்தது. இந்த நாவலும் நட்டுமையின் உருவக வழக்கில் சின்னப் போடியார் முகம்மது ஹனீபாவின் நட்டுமை நடத்தையைச் சுற்றி விரிகிறது.

இந்நாவலாசிரியர் தீரன் ஆர்.ஏம். நௌஸாத் கிழக் கிலங்கை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கல்முனையில் தபால் அதிபராகக் கடமை புரிகிறார். கிழக்கிலங்கையின் முக்கியமான இளம் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், 1980களிலிருந்து எழுதி வருகிறார். இதுவரை சுமார் இருபத்தைந்து சிறுகதைகளும் பல கவிதைகளும் எழுதியிருக்கிறார். போட்டிகளில் பரிசு பெற்ற இவரது எட்டுச் சிறுகதைகளின் தொகுப்பு ‘வல்லமை தாராயோ’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இவரது ‘பள்ளிமுனைக் கிராமத்தின் கதை’ முஸ்லிம் குரல் என்ற பத்திரிகையில் 2003இல் தொடராக வெளிவந்தது. சுந்தர ராமசாமி நினைவுக் குறுநாவல் போட்டியில் முதல் பரிசுபெற்ற ‘நட்டுமை’ நூலுருப்பெறும் இவரது முதலாவது நாவல்.

சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய கிழக் கிலங்கை முஸ்லிம் கிராமம் ஒன்றை களமாகக் கொண்டது இந்த நாவல். கிழக்கிலங்கை முஸ்லிம் கிராம வாழ்வின் ஒரு பக்கத்தை இந்நாவல் நமக்குக் காட்ட முயல்கின்றது.

கிழக்கிலங்கைக் கிராமங்கள் பெரும்பாலும் விவசாயக்கிராமங்கள்தான். நவீனமயப்பட்ட இன்றைய சூழலில்கூட

நிலஉடைமைச் சமூகத்தின் எச்சங்கள் பலவற்றை இங்குக   £ணலாம். இந்த நாவல் நவீனமயமாதலுக்கு முற்பட்ட சூழலைப் பின்புலமாகக் கொண்டது. அன்றையக் கிராமங்களில் போடிமார் முக்கியமான அதிகார மையங்களாக இருந்தனர். போடி என்ற சொல் நிலஉடைமையாளர்களைக் குறிக்கும். போடியார் என அவர்கள் மரியாதையாக அழைக்கப்பட்டனர். நிலத்தையும் பணத்தையும் மூலதனமாகக் கொண்டவர்கள் இவர்கள். உடலுழைப்புடன் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்கள். போடியாரின் நிலத்தில் பயிர்ச் செய்கைக்குப் பொறுப்பானவர் வயற்காரர் என அழைக்கப்பட்டார். இவர்கள் போடியாரின்

 பண மூலதனத்துடன் தமது உடலுழைப்பைச் செலுத்தி பயிர்ச் செய்கையில் ஈடுபடுவர். ஒவ்வொரு போடியாரும் குறைந்த பட்சம் ஒரு வயற்காரனைக் கொண்டிருப்பார். உற்பத்திசார்ந்த வயல் நிருவாகம் முழுவதையும் இவர்களே மேற்கொள்வர். போடிமாருக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள உறவு நில உடைமை உறவாகவே இருக்கும். வயற்காரனின் முழுக் குடும்பமும் போடியாரின் குடும்பத்துடன் நெருக்கமான ஊழிய உறவில் கட்டுண்டிருக்கும்.

விவசாயத்துடன் பிணைப்புண்ட பிறிதொரு பிரிவினர் கூலி விவசாயிகள். உழுதல், விதைத்தல், அறுவடை செய்தல், சூடடித்தல் முதலிய வேலைகளை இவர்களே செய்வர். இவர் களது கூலி நெல்லாகவோ பணமாகவோ கிடைக்கும்.

வயற்காரரைவிட போடியாரின் வயல்களை மேற்பார்வை செய்வோரும் இருந்தனர். இவர்கள் முல்லைக்காரர் என அழைக்கப்பட்டனர். பெரிய போடிமார் தமக்கென முல்லைக் காரர் ஒருவரை வைத்திருப்பர்.

பலருடைய வயல்களை உள்ளடக்கிய ஒரு வயற் பிரதேசம் கண்டம், வெளிவட்டை என பலவாறு அழைக்கப்பட்டது. அத்தகைய ஒவ்வொரு வயற் பிரதேசத்துக்கும் நீர்ப்பாய்ச்சல்,

             £துகாப்பு நிருவாகத்துக்குப் பொறுப்பாக ஒரு வட்டை விதானை நியமிக்கப்பட்டிருப்பார். பேச்சு வழக்கில் இவர் வட்டானை எனப்பட்டார். விதானை காலனித்துவ காலத்தில் இங்கு அறிமுகமான சொல். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கிராம அதிகாரியே விதானை எனப்பட்டார். பிரித்தானிய ஆட்சி யாளர் சில விதானைமாருக்குப் பொலிஸ் அதிகாரமும் வழங்கி யிருந்தனர். இவர்கள் பொலிஸ் விதானை என அழைக்கப் பட்டனர். இது பேச்சுவழக்கில் பொலிசானை என்று மருவிற்று.

இந்த நாவல் உம்மாதுறை என்ற ஒரு முஸ்லிம் விவசாயக் கிராமத்தின் இந்த அதிகார மையங்களைப் பின்புலமாகக் கொண்டு வளர்கிறது. சுதந்திரத்துக்குச் சற்று முந்திய ஒரு முஸ்லிம் விவசாயக் கிராமத்தின் சமூக வாழ்வை, அதன் அசைவியக்கத்தை, அதன் சகல அம்சங்களுடனும் சித்திரிப்பது ஆசிரியரின் நோக்கமல்ல என்று தெரிகிறது.

1930கள் கிழக்கிலங்கையின் சமூக அரசியல் அசை வியக்கத்தில் முக்கியமான காலகட்டம் எனலாம். தென்னாசியா வில் இலங்கையில்தான் முதல்முதல் சர்வசன வாக்குரிமை அமுலுக்கு வந்தது. சர்வசன வாக்குரிமையின் அடிப்படையில் சட்டசபைக்கான முதலாவது பொதுத் தேர்தல் 1931இல் நடைபெற்றது. இந்த நாவலின் கிராமம் உள்ளடங்கும்

மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் பிரமுகரான மாக்கான் மாக்கார் போட்டியிட்டார். முஸ்லிம் பெண்களை வாக்களிக்கத் தூண்டுவதற்காகக் கொழும் பில் இருந்து உலமாக்களைக் கொண்டுவந்து பெண்கள் வீட்டை விட்டு வெளியேவந்து வாக்களிக்கச் செல்லலாம் என்று ஃபத்வா கொடுக்கச் செய்தார் என அவர் பற்றிய குறிப்பு ஒன்று உண்டு. இந்த நாவல் தொடங்கும் 1936இல் இரண்டாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இனத்துவ அடையாள அரசியல் அதிர்வுகள் ஏற்படத் தொடங்கிய காலகட்டம் இதுதான். தங்களுக்கும் கல்வி, தொழில் வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், அரசியல் அதிகாரம் என்பன வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் மேற்கிளம்பத் தொடங்கிய காலம் இது. 1936இல்             £ன் கல்முனையில் முதல்முதல் பெண்களுக்கான ஒரு பள்ளிக்கூடமும் ஆரம்பிக்கப்பட்டது. இத்தகைய சமூக அசை வியக்கத்தை, அரசியல் அதிர்வுகளைப் பதிவு செய்வது நாவ லாசிரியரின் நோக்கமாக இருக்கவில்லை. அவை இந்த நாவலின் தூரத்துச் செய்தியாகக்கூட இல்லை. உம்மாதுறை ஒரு விவசாயக் கிராமமாக இருந்தாலும் நீர்ப்பாய்ச்சல் தொடர் பான சிறு சச்சரவைத் தவிர விவசாயக் கிராமத்தின் உற்பத்தி உறவுகளோ, வர்க்க உறவுகளோ, விவசாயிகளின் வாழ்க்கை அனுபவங்களோ இந்நாவலின் மையமாக இல்லை.

அரசியல், சமூக அசைவியக்கங்களிலிருந்து விலகிய ஒரு ‘தூய’ முஸ்லிம் விவசாயக் கிராமத்தையும், அதன் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றையும், அக்கிராமத்து மக்களின் தனிமனித நடத்தைக் கோலங்களையும் சித்திரமாக்குவதே இங்கு நாவலாசிரியரின் நோக்கமாகத் தெரிகிறது. இதுவரை தமிழ் வாசகர்கள் அறியாத ஒரு புதிய வாழ்க்கைப் புலத்தை இந்நாவல் கட்டமைக்கிறது. அந்தவகையில் இந்நாவல் நௌஸாத்தின் ஒரு வெற்றிப் படைப்பு என்றுதான் கூற வேண்டும். சுந்தர ராமசாமி நினைவுக் குறுநாவல் போட்டியில் இந்நாவல் முதல் பரிசு பெற்றமை ஆசிரியரின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது எனலாம்.

இந்த நாவலின் முக்கியமான பாத்திரம் பெரிய போடியார் அகமது லெவ்வை. இந்த நாவலை முழுமையாக அவர் ஆக்கிரமித்துக்கொள்ளாவிடினும் அவரது அதிகார மையத்தின் நிழல்களாகவே ஏனைய பாத்திரங்கள் இயங்குகின்றன. பெரிய போடியார் தனது மகன் சின்னப் போடியார் முகம்மது அனிபாவுக்கு 90 ஏக்கர் காணியை நன்கொடையாக எழுதி வைக்கும் நிகழ்வுடன் நாவல் தொடங்குகின்றது. தன் மகன்பிறிதொருவனின் மனைவியுடன் கள்ள உறவு கொண்டு அதன் க           £ரணமாகக் கொல்லப்பட்டபின், கள்ள உறவின் மூலம் அவனுக்குப் பிறந்த குழந்தையை தன் பேரக் குழந்தையாகவும் தன் குடும்ப உறுப்பினனாகவும் அவர் ஏற்றுக்கொள்வதுடன் நாவல் முடிகிறது. பெரிய போடியார் ஆளுமை மிக்க, அன்பும் கருணையும் கொண்ட ஒரு நாயகனாக இந்நாவலில் உரு வாக்கப்பட்டிருக்கிறார். போடிமார் பற்றிய ஒரு உடன்பாடான சித்திரம் இது.

 

ஆயினும் நாவலின் பிரதான கதைப்பின்னல் சின்னப் போடியார் முகம்மது அனீபாவின் காதல், காமம், சண்டித்தனம், அதன் விளைவான சண்டை, கொலை ஆகியவற்றைச் சுற்றியே நகர்கிறது.

முகம்மது அனீபாவுக்குப் பல பெண்களோடு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. என்றாலும் மீராவட்டானையின் மகள் செய்னம்பு மீது அவனுக்குக் காதல். அதேவேளை தன் எடுபிடியும் தோழனுமான மம்மலியின் (முகம்மது அலி என்பதன் கிராமியத் திரிபு) இளம் மனைவியும் செய்னம்புவின் தோழியுமான யம்னாவுடன் அவளது விருப்புக்கு மாறாகவே உறவு வைத்திருக்கிறான். அதன்மூலம் அவள் வயிற்றில் ஒரு குழந்தையும் வளர்கிறது. விபரம் புரியாத மம்மலி அதைத் தன் குழந்தை என்றே நினைக்கிறான். சின்னப் போடியாருக்குச் செய்னம்பு மீதுள்ள காதலுக்குத் துணைநின்று அவளை அவனுக்குத் திருமணம் செய்துவைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறான்.

செய்னம்புவுக்கோ தன் மாமி மகன் - முறைமாப்பிள்ளை - உமறுலெவ்வைமீது விருப்பம் இருக்கிறது. இதன் காரணமாக சின்னப் போடியாருக்கும் உமறுலெவ்வைக்கும் இடையே முரண்பாடு வளர்ந்து அடிதடிவரை போகிறது. உமறுலெவ்வை கைதுசெய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறான். அவனை விடுவிப்பதற்கு மீராவட்டானை பெரிய போடியாரின் உதவியை நாடுகிறார். மகன் சம்மதித்தால், தான் அதைச் செய்வதாக பெரிய போடியார் கூறுகிறார். தன் மகளை அவ னுக்குக் கலியாணம் செய்யச் சம்மதித்தால்தான் சின்னப் போடி அதற்கு இணங்குவான் என்பது அவருக்குத் தெரியவரு கிறது. தவிர்க்க முடியாமல் அவரும் அந்த முடிவுக்கு வருகிறார்.

ஆனால் சின்னப் போடியை செய்னம்புவுக்குக் கட்டி வைப்பதில் யம்னாவுக்கு உடன்பாடு இல்லை. அவள் தன் கணவன் மம்மலியிடம் சின்னப் போடி பற்றிய உண்மையைச் சொல்லிவிடுகிறாள். மம்மலி தன் எஜமான விசுவாசத்தை மறந்து, சந்தர்ப்பம் பார்த்து சின்னப் போடியைக் கொன்று பழிதீர்த்துகொள்கிறான். தானும் நச்சுக்காயைத் தின்று மருத்துவமனையில் இறந்துபோகிறான். யம்னா குழந்தை யைப் பெற்றெடுக்கிறாள். உமறுலெவ்வை செய்னம்பு திருமணம் நிறைவேறுகிறது. யம்னா பெரிய போடியாரிடம் உண்மையைச் சொல்லிவிட்டு தற்கொலைசெய்துகொள்கிறாள். போடியார் அது தன் பேரக்குழந்தைதான் என்பதை அதன் கைவிரல் அமைப்பைக்கொண்டு அடையாளம் காண்கிறார். மக்காவுக்குச் சென்று ஹாஜியாராகத் திரும்பிவந்து தன் பேரனைப் பொறுப் பேற்றுக்கொள்கிறார். இந்த நாவலின் கதைச் சட்டகம் அல்லது எலும்புக்கூடு இதுதான்.

இக்கதையில் தமிழ் சினிமாவின் நிழல் படிந்திருந்தாலும், ஆசிரியர் இதற்கு இரத்தமும் தசையும் சேர்த்து ஒரு அசல் கிராமத்தின் உயிரையும் உருவத்தையும் கொடுக்க முயன்றிருக் கிறார். நவீனத்துவத்தின் வாடைபடியாத கிராமத்து மனிதர்கள் சிலரைப் பாத்திரமாக்கியிருக்கிறார். பெரிய போடியார் அகமது லெவ்வை, மீரா வட்டானை, சின்னப் போடியார் முகம்மது அனீபா, உமறுலெவ்வை, மம்மலி ஆகிய ஆண் பாத்திரங் களும், யம்னா, செய்னம்பு ஆகிய பெண் பாத்திரங்களுமே இந்த நாவலை நகர்த்திச் செல்கின்றன. இடைக்கிடை வந்து போகும் முக்குலத்துக் கிழவிக்கும் இந்நாவலில் முக்கிய இடம் உண்டு. போடியார் வீட்டுப் பெண்கள் முகமற்றவர்களாகவே வந்துபோகின்றனர். சிறிது நேரம்தான் வந்துபோனாலும் அத்தர்பாவா நம் மனதில் இடம்பிடித்துவிடுகிறார். காட்டுப்பள்ளி கொடியேற்ற விழாவும், பொத்துவில் பீர் முகம்மது அண்ணா வியார் குழுவினரின் பொல்லடி நிகழ்ச்சியும் கிராமியப் பண் பாட்டுக் கூறுகளாக அறிமுகமாகின்றன.

இந்நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உரையாடல் மொழி விசேடமாகக் குறிப்பிடத்தக்கது. கிழக்கிலங்கை முஸ்லீம் களின் பேச்சுவழக்கைக் கையாள்வதில் ஆசிரியர் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார். நாவலுக்கு இந்த மொழி ஒரு புதிய வலுவைக் கொடுக்கிறது. சமூகக் கட்டமைப்பு பற்றிய ஒரு ஆழமான பார்வையை இந்நாவல் வெளிப்படுத்தாவிட்டா லும், ஒரு புதிய வாழ்க்கைப் புலத்தைத் தமிழ் நாவலுலகுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் தன் முக்கியத்துவத்தை நிலை நாட்டிக்கொள்கிறது எனலாம். நாவலாசிரியருக்கு என் பாராட்டுக்கள்.

எம். ஏ. நுஃமான்

 

தீரதம் நூலுக்கான முன்னுரை -கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ்

 

தீரதம்  நூலுக்கான  முன்னுரை -கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ்

 


சமூகங்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதில் இலக்கியங்களுக்கு முக்கிய பங்குண்டு. ஈழத்தில் தமிழ் பேசும் இரு சமூகமானதமிழர்களும் முஸ்லிம்களும் தமதுஅடையாளத்தைவெளிப்படுத்துவதற்கு இலக்கியத்தைமுக்கியசாதனமாகப் பயன்படுத்திஉள்ளனர். ‘மரணத்துள் வாழ்வோம்’ என்றகவிதைத் தொகுதி ஈழத்துத் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்தமானபோராட்டவலியைவெளிப்படுத்துவதாகஅமைந்தது. இதேபோன்று‘மீசான் கட்டைகளில் மீளஎழும் பாடல்கள்’ என்றதொகுதி போராட்டத்தின் உக்கிரத்திற்குள் நசுங்குண்ட முஸ்லிம்களின் வலியைவெளிப்படுத்தியது. அதேநேரம்தொகுதிகளாகவெளிவராவிடினும் 1980களுக்குப் பின்னர் ஈழத்தில் வெளிவந்தபெரும்பாலானசிறுகதைகள் அவ்வச்சமூகஅடையாளத்தைவெளிப்படுத்துவதில் பெரும் பங்குவகித்தன.

 1950களில் அ.ஸ.கிழக்கிலிருந்து சிறுகதைஎழுத முனைந்தபொழுது வேறொருவிதமான நெருக்கடியைச் சந்தித்தார். தமிழகசஞ்சிகைகளுக்குஅவர் எழுதியசிறுகதைகளில் இருந்த இங்குள்ளஊர்ப்பெயர்களும் ஆட்பெயர்களும் திருத்தப்பட்டுத் தமிழகப் பாணியிலே வெளிவந்தது. ஈழத்துச் சுதேசஉணர்வுகளுடன் எழுதப்பட்ட அவரது கதைகள் செங்கல்பட்டுவாகவும் ஆபீசாகவும் தலைமைக்குமாஸ்தாவாகவும் திருநெல்வேலிச் சந்தியாகவும் மாற்றப்பட்டவரலாறுஉண்டு.

  அதுபோக ஷரிஆ சம்பந்தப்பட்டபிரச்சினைகளைக் கதைக் கருவாகக் கொண்டுஅவர் சிலகதைகளைஎழுதியவரலாறும் உண்டு. இந்தத் தொடர்ச்சிபோக 1980களில்தான் தமதுசொந்தசமூகஅடையாளங்களை இயல்பாகவும் வேண்டுமென்றும் தமதுகதைகளுக்குள் கொண்டுவரநமதுஎழுத்தாளர்கள் முனைந்தனர்.

 இந்தவரிசையில் சாய்ந்தமருதைச் சேர்ந்த தீரன் ஆர்.எம். நௌஸாத் ‘வல்லமைதாராயோää‘வெள்ளிவிரல்’ என்ற இரு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டவர். இவரது பிந்திய சிறுகதைத்தொகுதியில் இனப்பிரச்சினை தொடர்பான பல்வேறுகதைகள் வெளிவந்தபோதும் முஸ்லிம் சமூகம் சார்ந்த சிலகதைகளும் வெளிவந்தன. அதேபோன்று இத் தீரதம் என்ற தொகுதியில் வெளிவந்தகதைகளும் இனப்பிரச்சினை சார்ந்ததும் சமூக அடையாளங்களை வெளிப்படுத்தும் கதைகளாகவும்அமைந்துள்ளன.

 அதேநேரம் ‘நட்டுமைää’ ‘கொல்வதெழுதுதல் 90’ ஆகிய இரண்டு நாவல்களையும் தீரன் எழுதியுள்ளார். கிழக்கில் நாவல் துறையின் வளர்ச்சி மிகவுமே போதுமானதல்ல. அவ்வாறு இருப்பினும் இவ்விரு நாவல்களையும் முக்கியமான நாவல்களாகக் கொள்கிறபோதும் இதனுள் உள்விழுந்து பார்க்கிறபோது விமர்சனரீதியாகச் சிலகேள்விகளை எழுப்பவேண்டிய தேவையிருக்கிறது. அதேபோன்று தீரதம் என்ற இத்தொகுதியில் வெளிவந்தசிறுகதைகள் சிலவற்றைப் பற்றியும் சிலகேள்விகள் எழுப்பவேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாகக் கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் அனுபவங்கள் இந்தக் கதைகளில் பதிவாகியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

 ஒய்த்தாமாமா’ää‘பொன்னெழுத்துப் பீங்கான்ää தீரதம். முதலானகதைகள் முஸ்லிம் சமூகம் சார்ந்த மிகமுக்கியமான கதைகள். இப்போதைய சிறுவர்களுக்கு ஒய்த்தாமாமா பற்றிய அனுபவம் இருப்பதில்லை. ஒய்த்தாமாமாவின் வேலைகள் எல்லாவற்றையும் வைத்தியர்கள் பாரமெடுத்துக்கொண்டார்கள். முஸ்லிம்களிடம் சாதிஉண்டா என்று கேட்பவர்களுக்கு ஒய்த்தாமாமா ஓர் ஆதாரமாக அமையக்கூடும். ஆனால்ääஅந்தச் சமூகக் கட்டுமானத்தைப் பற்றி தீரன் சொல்லவரவில்லை என்று நினைக்கிறேன். அதேநேரம ;ஒய்த்தாமாமாவைப் பற்றிய ஒரு பதிவினை தீரன் மிகஅற்புதமாகக் கொண்டுவந்திருக்கிறார்.

பொன்னெழுத்துப் பீங்கான்’ லண்டனுக்குச் சென்ற தன் மகளின் செய்தியை அறியவிரும்பும் தாயின் ஏக்கத்தைவெளிப்படுத்துகின்ற ஒரு நல்லகதை. அவள் பக்கத்தில் ஒரு வெள்ளைக்காரனோடு நின்று எடுக்கப்பட்டஒரு புகைப்படப் படத்தைக் கண்டவுடன் அந்தத் தாய்க்கு ஏற்பட்ட மனஉணர்வு மிகஅற்புதமாக இந்தக் கதையில் வருகிறது. புலிகளினால் கொலைசெய்யப்பட்டதன் கணவர் ஒரே பீங்கானிலே–பொன்னெழுத்துப் பீங்கானிலே சாப்பிட்ட கதையை அந்தத் தாய் இக்கதையில் விபரிக்கிறாள்.
அப்படிப்பட்டஎனக்கிப் பொறந்தஒனக்கிட்டயும் அந்தப் பொன்னெழுத்துப் பீங்கான்தான் இரிக்கிம்..அதுலநீஆரையும் சாப்பிடஉடமாட்டாய் ண்டும் எனக்கித் தெரியிம்..ண்டாலும் புள்ளே..எண்டமனம் கெடந்துஅல்லாடுது.. ஒடன இந்த கெசட்டுப் பீசக் கேட்டஒடனே… நாட்டுக்குப் பறந்துவாடா என்டகண்டுமகளாரே! நீ வெராட்டி என்ட மய்யத்துலதான் முளிப்பாய்.. செல்லிட்டன்.. வல்லபெரியநாயன் ஒனக்கு ஒதவி செய்யட்டும்.. ஆமின்… ம்க்க்க்க்..ம்ம்ம்.
கிராமிய உணர்வு ததும்பும் இக்கதையில் பொன்னெழுத்துப் பீங்கான் இங்கு ஒரு குறியீடாக வருவதாகவே நான் உணர்கிறேன். இக்கதையிலும் முஸ்லிம் உணர்வு சார்ந்த வியாக்கியானம் ஆங்காங்கே வருகிறது.

தீரதம் என்பது இறைகாதலை வெளிப்படுத்துகிற மிகமுக்கியமான ஒருகதை. சூபி இசம் சார்ந்த இக்கதை பழைய மெய்ஞ்ஞான பாடல்களின் இன்னுமொரு வியாக்கியானமாக உரைநடையில் வந்த ஒன்றாகவேநான் நோக்குகிறேன். புதுமைப்பித்தன் முதலான பலசிறுகதை ஆசிரியர்களும் இந்தத் தத்துவார்த்தரீதியான ஆன்மீகம் சார்ந்த கதைகளை எழுதியிருக்கிறார்கள். அவ்வகையில் முஸ்லிம்கள் சார்ந்த ஆன்மீகரீதியான உணர்வினை வெளிப்படுத்துகிற மிகஎளிய ஒருகதையாகவே தீரதம் கதையைக் கொள்ளலாம்.

கிராமிய அனுபவங்களைக் கூறுகிற அதுவும் கிழக்குப் பிரதேச கிராம அனுபவங்களைக் கூறுகிற ஒரு நல்லகதை ‘மறிக்கிடா. ஆனால்ää இக்கதையைப் பொறுத்தவரையில் மாற்று இனப் பாத்திரங்கள் கதையாகி இருப்பது நமது இன உறவுக்கு அப்பாலே முரண்படத்தக்க கேள்விகளையும் எழுப்பக்கூடும். இப்படியான கதை சொல்லுகிறபாங்கு ஈழத்துச் சிறுகதை மரபிலே உண்டு. மிகக் கவனமாக இந்தமாற்று இனப் பாத்திரங்களைக் கையாள்வதில் ஆசிரியர்கள் மிகப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவையிருப்பதாகவும் நான் உணர்கிறேன்.

அணில்’ இன ரீதியான விவகாரங்களை வெளிப்படுத்துகிற ஒருமுக்கியமான நல்லகதை. இதேபோன்று புதியஉத்தியில் அமைந்த இன விவகாரங்களைக் கையாள்கிற மற்றுமொருகதை ‘காக்காமாரும் தேரர்களும்’ இக்கதை வெறும் செய்திகளைத் தொகுத்துச் சொல்வதாக இருந்தாலும் ää
இதெல்லாம் ஒருசிறுகதையா?’ என்று முகத்தில் வீசினார் பத்திரிகைஆசிரியர். இதெல்லாம் சிறுகதையல்ல.. பெரும்பெரும் கதைகள்.. என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். –
இக்கதையிலுள்ள‘பெரும்பெரும் கதைகள்’ என்றசொல்லின் மூலமே இச்சிறுகதையின் முழு அர்த்தத்தையும் ஆசிரியர் வெளிக்கொண்டுவருகிறார். இவ்வகையான கதைகளை தீரன் முன்னரும் எழுதியுள்ளார்.

 ‘மும்மான்’ என்றகதையும் இன ரீதியான விவகாரங்களை வெளிப்படுத்துகிற நல்லகதை.

இலக்கியக்காரர் ஒவ்வொருவருக்கும் அவரவர் வீட்டிலே இருக்கிற பிரச்சினைகளை ஒரு அற்புதமான உத்தியோடு அணுகியிருக்கிற ‘கபடப்பறவைகள்’ என்ற கதை சுவாரசியமானதுதான்.

மேலும்சில கதைகளோடு அமைந்த இந்த தீரதம். என்ற தொகுதி ஒருநல்ல சிறுகதை ஆசிரியன் ஆர்.எம். நௌஸாத் என்பதற்கு மிகப் பெரும் சான்றாகும். நல்ல படைப்புக்களை வாசிக்கின்றபோது இன்னும் இன்னும் செழுமைபெற்ற நல்லகதைகள் வந்துசேரும். அதுமாத்திரமன்றி இந்தக் கதைகளைச் செப்பனிடச் செப்பனிட இன்னும் நல்லகதைகள் வந்துசேரும். நௌஸாத்தின் கதைகள் புதியஅனுபவங்களைத் தருகிற நல்லகதைகள் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. தீரதம் ஆசிரியருக்கு நமது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் என்றும் உண்டு.

கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ்

தலைவர்.. மொழித்துறை
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
ஒலுவில்- சிறிலங்கா.
2016.11.10

 

தீரதம் நூலுக்கான முன்னுரை-தி. ஞானசேகரன்

  

தீரதம் நூலுக்கான முன்னுரை-தி. ஞானசேகரன்

 

படைப்பிலக்கியத் துறையில் எழுத்தாளர் ஆர். எம். நௌஸாத் வெளியிடும் ஏழாவது நூல் இது.  ஏற்கனவே தமிழ்நாடு காலச்சுவடு இதழ் நடத்திய சுந்தரராமசாமி 75 இலக்கியப்போட்டியில்; பரிசுபெற்ற  ‘நட்டுமை’ நாவல்ää கொல்வதெழுதல் 90 நாவல்ää அரச சாகித்தியப் பரிசு பெற்ற ‘வெள்ளிவிரல்’ சிறுகதைத் தொகுதிää ‘வல்லமை தாராயோ’ சிறுகதைத் தொகுதி ஆகியவை வாசகர்களின் பார்வைக்குக் கிடைத்துள்ளன.

தற்போது உங்கள் கைகளில் தவழும் ‘தீரதம்’ என்ற இந்தச் சிறுகதைத் தொகுதிக்கான கதைகளை அனுப்பிää “எனது இலக்கிய முயற்சிகளில் ‘ஞானம்’ ஒரு பலமான பாதையை அமைத்துத் தந்ததுää ஒரு பெரிய உந்து சக்தியாக விளங்கியது. ஞானம் ஆசிரியர் என்ற முறையில் இந்தச் சிறுகதைத் தொகுதிக்கு ஒரு முன்னுரை எழுதித் தாருங்கள்” என எழுதியிருந்தார் நௌஸாத்.

தன்னடக்கத்துடன் அவர் இவ்வாறு எழுதியிருப்பினும்ää அவரது திறமைகளே அவரை ஓர் சிறந்த எழுத்தாளனாக உயர்த்தியிருக்கிறது. ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியொன்றில் ‘மீள் தகவு’ என்ற கதைக்கு மூன்றாம் பரிசினைப் பெற்றதன் மூலம்; ‘ஞானம்’ வாசகர்களுக்கு அறிமுகமான அவர் தொடர்ந்தும் ஞானம் சஞ்சிகை வருடாவருடம் நடத்திய போட்டிகளில் முதற்பரிசு உட்படப் பலபரிசுகளைப் பெற்றுத் தனது திறமைகளை நிரூபித்ததன் மூலம் எழுத்துலகில் தனது பலமான பாதையை வகுத்துக்கொண்டார். அவர்பெற்ற பரிசுகளும் அங்கீகாரங்களுமே அவருக்கு உந்து சக்தியாக விளங்கின.

நௌஸாத் என்னிடம் முன்னுரை கேட்டதுää என்மேல் அவர் கொண்டுள்ள அபிமானத்தால் என்னைக் கௌரவப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே தவிர வேறேதுமில்லை  என்பதை நான் உணர்கிறேன்.

இத்தொகுதியில் உள்ள ‘ஒய்த்தா மாமா’ää ‘கள்ளக் கோழி’ää ‘~;க்’ (தீரதம்) ஆகிய கதைகள் ஞானத்தில் வெளியானபோது வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.தான் வாழும் சமூகத்தின் மீதான பண்பாட்டு அம்சங்களையும் விழுமியங்களையும் சமூகக் கட்டமைப்பின் பல்வேறு கூறுகளையும் அவதானித்து அவற்றை உணர்வு பூர்வமாகச் சித்திரிப்பதில் நௌஸாத் வல்லவராக இருக்கிறார்.

இத்தொகுதியில் உள்ள முதலாவது கதையான ‘ஒய்த்தா மாமா’வை அவர் ஆரம்பிக்கும் விதமே அலாதியானது. பாசாங்கற்றää அர்த்தம் செறிந்த பழகு சொற்களை கலையழகோடு ஒழுங்கமைத்து வாசகர் உள்ளங்களில் ஓர் ஒட்டிழுப்பை அவர் ஏற்படுத்திவிடுகிறார்:

எனக்குப் பத்து வயதிருக்கும்போது அது நடந்தது.. ஒய்த்தா மாமாவைக் கண்டாலே எனக்குப்பயம். அவர் சிறுவர்களின் குஞ்சாமணியை தயைதாட்சண்யமின்றி அறுத்தெறிகிறவர் என்று கேள்விப்பட்டதிலிருந்து இந்தப்பயம். இது நிச்சயமாக நமக்கும் எப்போதோ நடக்கத்தான் போகிறதென்று உணர்ந்ததிலிருந்து அவரைக்கண்டாலே குலை நடுக்கம்தான். அப்படி இவர் குஞ்சாமணியை அறுத்தெறிகிறவர் என்றால்ää நம்மட வாப்பாää பெரியப்பாää பெரிய ஆம்பிளையள் எல்லாம் எப்படி ஒண்டுக்குப் போகிறார்கள் என்ற கேள்வி மண்டையைக் குடையும்…”  இப்படியாகத் தொடங்கிää தொடர்ந்து சுன்னத்துக் கலியாணம் எப்படி நடத்தப்படுகிறது என்ற செய்திகளையெல்லாம் விலாவாரியாகக் கதையில் ஆவணப்படுதியிருக்கிறார் ஆசிரியர். அவரது நுட்பமான பார்வையும்ää சொல்நேர்த்தியும் மிகவும் சுவாரஸ்யமாக  இக்கதையை நகர்த்திச் செல்கின்றன. சமூகம் சார்ந்த யதார்த்தப் பார்வையுடன்கூடிய விபரணை ஆசிரியரின் சிறப்பான சமூக அவதானிப்பைப் புலப்படுத்துவதாய் அமைந்துள்ளது.

கள்ளக் கோழி’ என்ற சிறுகதையில்ää கல்யாணம் ஆகி மூன்றே மாதத்தில்; கணவனும் மனைவியும பிரிய நேரிடுகிறது. கோபித்துக் கொண்டுபோன கணவனையும்; மனைவியையும் சேர்த்துவைக்க ஆத்தப்பா கிழவன் முயற்சி எடுக்கிறான்.

 “டே ஆத்தப்பாக் கௌவா.. ஒண்ட பேத்தியைப் பண்ணின நாள்ள இரிந்து என்ட மகனுக்கு யாவாரத்தல நட்டம்டா.. நமக்கு வள்ளா… குறி கேட்டுப்பார்த்துட்டம்; அவள வெலக்கினாத்தான் துசிவத்தும் வெலகுமாம். இனி இஞ்ச வராதடா கௌவா காத்திக் கோட்டுலதான் வழக்கு விளக்கம் எல்லாம்..” என மாப்பிள்ளையின் அம்மாக்காரி கூறிவிடுகிறாள்.வருடங்கள் இரண்டு ஓடிவிட்டன. வேறுவழியின்றி பேத்திக்கு கிழவன் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார். இந்த நிலையில் பேத்தி இரவில் மாட்டுத் தொழுவத்தில் இரகசியமாக ஓர் ஆடவனைச் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொள்கிறாள். இதனை  ஆத்தாக்கிழவன் அறிந்து கொள்கிறான். ஆனால் பேத்தியிடம் எதுவும் கேட்க வில்லை.  இரவில் தனது பேத்தியைக் காணவரும் அந்த ஆடவனை ஒளிந்திருந்து வெட்டிச்சாய்க்க அரிவாளுடன் வீட்டின் பின்புறத்திலுள்ள பெரப்பம் பத்தைக்குள் காத்திருக்கிறான் கிழவன்.

கதை முடிவை நோக்கிப் பின்வருமாறு நகர்கிறது ..‘அருவாள ஓங்க.. டோர்ச்சி லைற்று வெளிச்சத்துல அவண்ட சொத்தையப் பாத்த ஆத்தப்பா கௌவன் வெறைச்சிப் போய்ட்;டான். ஒடன அருவாக்கத்திய கீள போட்டுட்டான்ää வெக்கத்துல மெலச்சிப்போய் அப்பிடியே செல மாய்ரி நிண்டுட்டான்… அப்பிடியே குந்திட்டான்..

அந்தக் கள்ளக்கோழி யார் என்பது ‘கிளைமாக்ஸ்’.

வாழ்க்கையை யதார்த்தமாகப்படம் பிடித்துக்காட்டி நம் இதயங்களில் ஆழமாகப்பதிய வைக்கிறது இக்கதை. ஆசிரியரின் சமூக அனுபவம் இக்கதையைக் கட்டமைப்பதில் பெரிதும் உதவியிருக்கிறது. வாழ்வியலின் மெய்ம்மை இக்கதையில் வலுப்படுத்தப்படுகிறது. மானிடத்தையும் மானிட நடத்தை வேறுபாடுகளையும் மானிட நேயத்தையும் இக்கதை பிரதிபலிக்கின்றது.

பொன்னெழுத்துப் பீங்கான்’ என்ற சிறுகதையில் ஆசிரியர் சொல்லவரும் செய்தி மிகவலுவானது. சவரியத்தும்மாவின் புரு~ன் ஏகபத்தினி விரதன். பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன்.  சவரியத்தும்மாவுக்கு 26 ஆவது வயதாக இருக்கும்போது வயல்காவலுக்குச் சென்ற கணவன் புலிப்படையினரால் கொல்லப்படுகிறான். கைம்பெண்ணான  அவள் மறுமணம் செய்யாது தனது பத்து வயது மகளை வளர்த்து ஆளாக்குவதில் பெருமுயற்சி எடுக்கிறாள். மகளும் படித்து திறமையாகச் சோதனைகளில் சித்தியடைந்து அரசாங்கத்தினால் மேல்படிப்புக்கு லண்டனுக்கு அனுப்பப் படுகிறாள். அவ்வாறு சென்ற மகள் சிலகாலத்தின் பின் லண்டனில் இருந்து கடிதம் அனுப்புகிறாள். அத்துடன் தனது புகைப்படம் ஒன்றையும் சேர்த்து அனுப்புகிறாள். அந்தப்புகைப்படத்தில்;  ஒரு வெள்ளைக்காரனும் அவள் அருகிலே நிற்கிறான். அதனைக்கண்டு கலக்கமுற்ற சவரியத்தும்மாதனது மகளுக்கு அறிவுரை கூறுவதாக இச்சிறுகதை கட்டமைக்கப்பட்டுள்ளது. சவரியத்தும்மாää தான் கூறுவதை ஒரு ‘கெசட் பீஸில்’ பதிவு செய்து மகளுக்கு அனுப்புகிறாள்.

சவரியத்தும்மா தனது கணவனுடன் வாழ்ந்த காலத்தில்ää அவனால் அவளுக்குக் கூறப்பட்டதாக வரும் பகுதி இக்தையின் ஆணிவேர்:

டியே.. சவரியத்து.. இந்தப் பொன்னெழுத்துப் பிங்கானில் மட்டுந்தாங்கா நான் சாப்டுற.. பலபல பீங்கானுகள்ள  சாப்பிடுற பளக்கம் எனக்கு ல்லடி.. நீ யான் என்ட பொன் னெழுத்துப் பிங்கான். ண்டு சொல்லி என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டிச் சிரிச்சாரேää வெளங்கிச்சா புள்ள  ஒனக்கு அது ஏணுன்டு.. அதனுட கருத்து என்னண்டு..? பெரிய இங்கிலிசி சிங்கில மெல்லாம் படிச்சிரிக்கிறியே.. இதர அர்த்தம் தெரியுமா நொக்கு…?

இதில் ஆசிரியர் சொல்லும் வாழ்க்கைக் கூறுகளை மிக உருக்கமாகவும் நேர்மையாகவும் சித்திரிக்கிறார். நமது பாரம்பரிய சமூகப் பெறுமானங்களின் சிறப்பை வெளிப்படுத்துகிறார். இச்சிறுகதையின் கதைப்பின்னலுக்கு அப்பால்; ஓர் உன்னத வாழ்க்கையைத் தரிசிக்க முடிகிறது.

 ‘குறியீட்டியம்’ ஒரு நேர்த்தியான கலைவடிவமாகும். அது சுவைஞனை சிந்திக்கவும் தேடல்செய்யவும் வைக்கிறது. ‘மும்மான்’ என்ற சிறுகதை எமது நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான வரலாற்றை குறியீட்டுப்பாணியில் விபரிக்கிறது.

சிங்கள மக்களைச் சிங்கங்களாகவும்ää தமிழ்ப் போராளிகளை புலிகளாகவும்ää முஸ்லிம்களை முயல்களாகவும் உருவகித்துக் கதையை நகர்த்திச் செல்லும் ஆசிரியர்ää சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் நடுவே முயல்கள் அநியாயமாக அகப்பட்டுப் பேரழிவைச் சந்தித்த வரலாற்றைச் சித்திரிக்கின்றார். எதிர்காலத்தில் இந்தப் பேரழிவுகளிலிருந்து முஸ்லிம்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளää செய்ய வேண்டியது என்ன? என்ற கேள்விக்கு விடையிறுப்பதாக அமைகிறது இச்சிறுகதையின் முடிவு. ஆசிரியர்  சமூகத்துக்குச் சொல்ல வந்த செய்தியைக் கூறுவதற்கு போரியல் வரலாற்று நிகழ்வுகளைத் துணையாகக் கொண்டிருக்கிறார். மிகவும் கண்ணியமாகவும் நேர்மையாகவும் அழகுறச் சொல்லிச் செல்லும் அவரது முயற்சி பராட்டப்படவேண்டியது.

அணில்’ என்ற சிறுகதை பேசும் அரசியல் வித்தியாசமானது. இலங்கை அரசியல் வாதிகள் இனவாதம் பேசி அரசியல் நடத்தினாலும் இந்த நாட்டின் சாதாரணப் பொதுமக்கள் மத்தியில் உறவும் ஒற்றுமையும் நேயமும் இருக்கவே செய்கின்றன என்பதை இக்கதையிலே காண்கிறோம்.

நௌஸாத் தொழில் ரீதியாக ஒரு தபாலதிபகராகக் கடமையாற்றியவர். அவர் தனது நேரடி அனுபவங்களையே  கதையாக்கியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு  ‘அணில்’ என்ற கதையின் கதைக்களம்ää பாத்திரவார்ப்புää கதைச்சம்பவங்கள்ää சூழல் யாவும்  தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.

 பெரிய தபாலதிபர் வினாயகமூர்த்தி ஒரு யாழ்ப்பாணத் தமிழர். உதவித் தபாலதிபர் நஸீர் ஒரு முஸ்லிம். தபாற்சேவகன் இந்திக ஒரு சிங்களவர்.

பெரிய தபால் அதிபர் வினாயகமூர்த்தி யாழ்ப்பாணப் பேச்சு மொழியில் கறாராக அரசியல் பேசுவார்: ‘அடே நஸீர்…இந்திக்க கேளுங்கடா.. ஓமந்த கேம்ப எக்க அபே கொட்டி அற்றாக் கறன்ட வெலாவட்ட..(ஓமந்தைக் காம்பை எங்கள் புலிகள் தாக்கும்போது…) என்று புலிப்படைப் புகழ் பாடத்தொடங்கி ஸ்ரீ போராட்டம் தொடக்கம் தரப்படுத்தல் சட்டம்.. சிங்களம் மட்டும் சட்டம்… அதன் விளைவாக தமிழர் பாதிப்புகள்.. அதன் தொடர்ச்சியான போராட்டங்கள்ää அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்த வரலாறு… என்றெல்லாம் தொடரவே நஸீரும் இந்திகவும் அணிலும் புன்னகைத்தபடி வேறுவழியின்றி வேண்டா வெறுப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இப்படியாகப் பேசுகின்ற தபாலதிபர்ää ஒருநாள் இந்திகாவை சாராயம் வாங்கக் கடைக்கு அனுப்பிவிட்டு அவன் அன்பாக வளர்க்கும் அணிலை வெட்டிக் கறியாக்கி விடுகிறார்.இதனை அறிந்த நஸீர் அதிர்ந்து போய்விட்டான்.

இப்ப இந்திக வந்தான் எண்டால் என்ன நடக்கும்..? இங்க நடக்கப் போற கொலைக்கு நான் சாட்சியா இருக்க விரும்பேல்லை. திறப்பைப் புடிங்க ஐயா.. நான் வீட்டைபோறன்.. என்ன மடத்தனம் இது.. அவன்ட அணிலைப் புடிச்சி…பாவம் புண்ணியம் பாக்காம கொண்டு… சே… ஐயா கடைசியாச் சொல்லுறன் நீங்க இஞ்ச இருக்கிறது நல்லாயிருக்காது. டக்கெண்டு வெளிக்கிட்டு எங்கயாச்சும் போங்க…இல்ல என்னோட வாங்க.. அவன் இந்திகவிட அண்ணன்மார் ஆமில இருக்கான்.. அனுராதபுரத்தில் அறுத்து ஒரு மாதமாகல்ல… சே.. என்ன செய்யப் போறீங்க ஐயா..?

வீட்டுக்குச் சென்ற நஸீரால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. பெரியவர் கொலைசெய்யப் பட்டுவிடுவாரா என மனம் பதைபதைத்துக் கொண்டிருந்தது. இரவு தொலைபேசியில் பெரியவருடன் தொடர்புகொள்ள முயல்கிறான். எதிர் முனையில வெகுநேரமாகியும் பதிலில்லை.

கவித்துவமான உரைநடை கதையின் இலக்கியப் பெறுமானத்தை வலுவுடையதாக ஆக்கிவிடுகிறது.

கதைகளைக் கட்டமைப்பதில் ஆசிரியர் தேர்ந்தெடுக்கும் உத்திமுறைகள் பற்றியும் விசே~மாகக் குறிப்பிடவேண்டும். ‘ஒயத்தா மாமா’ சிறுகதை ஒரு சிறுவனின தற்கூற்றாக அமைந்துள்ளது.  ‘பொன்னெழுத்துப் பீங்கான்’  சிறுகதை ஒரு தாய் மகளுக்கு சி.டி.யில் தன் பேச்சைப்பதிவு செய்து தபாலில் அனுப்புவதாக அமந்துள்ளது. ‘மும்மான்’ குறியீடாகச் சொல்லப்படுகிறது. சில கதைகள் ஆசிரியர் கூற்றும் பாத்திரங்களின் உரையாடல்களுமாக வளர்க்கப்படுகின்றன.

காக்கா மார்களும் தேரர்களும்” என்ற கதையில் ஆசிரியர் ஒரு புதிய உத்தியைக் கையாள்கிறார். இக்கதை பத்திரிகைச் செய்திகள் பலவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது.  நமது நாட்டில் பிக்குகள் சிலர் தினம் தினம் முஸ்லிம்களுக்கு எதிராகப் பரப்பும் இனரீதியான செய்திகளும்ää முஸ்லிம் தலைவர்கள் சிலரின் நழுவல் போக்குகழும். ஆலிம் சபையினரின் இயலாமையும்ää முஸ்லிம் அமைச்சர்கள்; சிலரின் அறிக்கைகளும் செய்திக் கீலங்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் இனரீதியான துன்புறுத்தல்களையும்  அவற்றிற்கு ஏதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முடியாத கையறுநிலையையும் படம் பிடித்துக்காட்;;டும் ஆசிரியர்ää இக்கதைமூலம் ஒரு சமூக விளிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

இத்தொகுப்பில் உள்ள தீரதம்ää கபடப்பறவைகள்ää ஆத்துமீன்ஆசை ஆகிய கதைகளும் இலக்கியப் பெறுமானம் கொண்ட கதைகளே.

நௌஸாத்தின் சிறுகதைகளின் உயிரோட்டமான அம்சம் அவரது உரைநடை. அனுபவத்தைத் தொற்றவைப்பதற்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்த – உணர்ச்சிக் கூறுகள் நிறைந்த - அதேவேளை சமூக யதார்த்தத்திலிருந்து விட்டகலாத நடைச்சிறப்பு அவருடையது.

நௌஸாத் கதைசொல்லும் முறையில் ஒரு புதுமை இருக்கிறது. புதுப்புனல் ஊற்றின் குளிர்மைப் பிரவாகம் கொள்கிறது. அவருடைய சிறுகதைகளைப் படித்து முடித்ததும் அவைதரும் உணர்வுகள் படிப்பவர் மனதில் தொற்றி நிற்கின்றன.

மேலும் பல வெற்றிகள் எதிர்காலத்திலும் அவருக்குக் காத்திருக்கின்றன என்பதை இச்சிறுகதைத் தொகுதி கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளது. நௌஸாத்துக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

தி. ஞானசேகரன்

 

ஞானம்’ சஞ்சிகை பிரதம ஆசிரியர்

3-பிää 46ஆவது ஒழுங்கை

கொழும்பு -06

29-06-2016

 

 

கொல்வதெழுதுதல்.90 ’ நூலுக்கான முன்னுரை- எம்.எம்.எம். நூறுல்ஹக்

 

‘கொல்வதெழுதுதல்.90 ’   நூலுக்கான முன்னுரை- எம்.எம்.எம். நூறுல்ஹக்.

 

இலங்கையின் தமிழிலக்கியப் பாட்டையில் போர்க்கால இலக்கியங்கள், புலம்பெயர் இலக்கியங்கள்  என்பன விடுதலைப் போராட்டத்தின் பக்க விளைவான இலக்கிய வடிவங்களாக தோற்றம் பெற்றவையாகும்.

அந்த வகையில்,  ஆர்.எம். நௌஷாத் எழுதியுள்ள கொல்வதெழுதுதல்.90. என்ற இந்நாவலும்,  போர்க்கால இலக்கிய மரபை ஒட்டியதாக  பரிணமித்துள்ளது.  1990 ஆம் வருடகாலப் பகுதியில்  கிழக்கு இலங்கை முஸ்லிம்களின், கிராமங்களை  யுத்தத்தின் கோரக் கரங்கள் தட்டியபோது  அம்மக்களின்  அக்காலக் கையறு நிலையை  இலக்கிய வடிவமாக  வார்த்தெடுப்பதில்  இந்நாவல் ஓரளவு பங்களிக்கிறது எனலாம்.

இக்கதை 1990 களில் எழுதப்பட்டிருந்தாலும்,  எமது ‘முஸ்லிம் குரல்’ பத்திரிகையில், 2003 இல், ‘பள்ளிமுனைக் கிராமத்தின் கதை’  என்ற பெயரில்,  தொடராகப் பிரசுரம் பெற்றிருந்தது.  2003 இல்,  யுத்தம் தீவிரமடைந்திருந்த  சமயத்தில்,  முஸ்லிம் குரல் பத்த்ரிகையைத் துணிகர முயற்சியாகக் கொண்டு வந்தவர் நண்பர்  எம். பௌசர் ஆவார்.

அதன் ஆசிரியபீடத்தில், பணிபுரிந்த எமக்கு  விடுக்கப்பட்ட  அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும்  உயிராபத்தை  ஏற்படுத்த முனைந்த போது  ஏற்பட்ட நெருக்குவார நிலையில் கூட  முஸ்லிம் குரல் தனது  சமூகப் பணியை பொறுப்புடனும்  துணிச்சலுடனும்  தொடர்ந்தது.  இந்நாவல் தொடர்கதையாக  16.05.2003 முதல்  முஸ்லிம் குரல் சுவடு 10 இல் ஆரம்பித்து 26.12.2003 வரை  சுவடு 29 இல்  நிறைவு பெற்றிருந்தது.

பல்வேறுபட்ட ஆயுதக் கலாசாரங்கள்  தலைவிரித்தாடிய 1990 காலப்பகுதியில்  அவற்றுக் கெதிராகக்  கிழக்கிலிருந்து கிளர்ந்தெழுந்த ஒரு முஸ்லிம் தனித்துவ தலைமையின்  ஆகர்ஷிப்பில்  ஈர்க்கப்பட்ட  ஆயிரமாயிரம் இளைஞர்களில்  முத்துமுகம்மது என்ற  ஒருத்தனின்  அரசியல்-அன்பியல்-போரியல்  என்பன இந்நாவலில்  வெகு இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளன.

கிராமத்து வீதிகளில்,  வெறுமனே பாடிக்கொண்டு திரிந்த  இந்த இளைஞன்  வஞ்சிக்கப்பட்ட தனது  அன்பியலையும், வலிந்து திணிக்கப்பட்ட அரசியலையும்  அதனூடே,  தான்  அனுபவித்த  பயங்கரவாதத்தையும்  எதிர்கொண்டு  அவற்றினூடேயே  உரம்பெற்று  ஒரு பண்பட்ட அரசியல்வாதியாக பரிணமித்துத் தனது  பிரதேசத்துக்கான  ஊராட்சித் தலைவராகவும்,  அந்த மாவட்டத்துக்கே  ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும்  ஆன ஒரு  அசாதாரண நிகழ்வே  இந்நாவலின் கதைச் சட்டகமாக அமைந்துள்ளது.

ஒரு கிராமத்தின்  தேர்தல் கள நிலைவரங்கள், கொலைக்கள விபரங்கள் காதலுணர்வுகள்  ஆகியன வெகு யதார்த்தமாக  இதில் சித்தரிக்கப்பட்டுள்ளன.  அதேவேளை,  அப்பாவிக் கிராமத்து மனிதர்களின்  மனவியல்புகள்,  வர்ணனைகள், பேச்சோசைகள்,  என்பன கதையோட்டத்தின் ஊடே அற்புதமாகக் கையாளப்பட்டுமுள்ளன. நாவலாசிரியர்  ஒரு திறமையான கதைசொல்லி  என்பதை அவரது  எழுத்துக்கள் நிறுவியிருக்கின்றன.

எனினும், சற்றேறக்குறைய அதே காலப்பகுதியில், காத்தான்குடி, மூதூர் பள்ளிவாசல் படுகொலைகள், இந்திய அமைதிப்படை வெளியேற்றம், விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி  போன்ற பல நிகழ்வுகள் பற்றி  இந்நாவலில்  அழுத்தமாகப் பதியப்படவில்லை  என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயின், போர்க்கால இலக்கியம் பற்றிய  பகிர்தல்களின் போதும், இலங்கையின் போரியல்  பற்றி அறியாத தமிழக வாசகர் மத்தியிலும்  தனது போர்க்காலப் புதினத்தை  இந்நாவல்  அழுத்தமாகப் பதிவு செய்யும்  என்பதில் சந்தேகமில்லை.

நாவலாசிரியரின்  எழுத்துப் பணிக்கு  எனது  மனமார்ந்த பாராட்டுதல்கள் உரித்தாகுக.

 

ஹாதிபுல் ஹுதா, பன்னூலாசிரியர்,

எம்.எம்.எம். நூறுல்ஹக்

(முன்னாள் பிரதி ஆசிரியர். முஸ்லிம்குரல்)

சாய்ந்தமருது

01.11.2013 .

வக்காத்துக்குளம் நூலுக்கான முன்னுரை.. கிண்ணியா எஸ். பாயிஷா அலி.

 

வக்காத்துக்குளம் நூலுக்கான முன்னுரை.. 

கிண்ணியா எஸ். பாயிஷா அலி.

 

பசுங்கருத்துக்கால ஈரப்பதிவுகள்......மரக்காலையொன்றில் நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருக்கும் அரிந்த தண்டுத் துண்டங்களின் குறுக்குவெட்டு முகத்தை உற்று நோக்கியதுண்டா? நீரலைகள் விரிந்தலைவது போலத் தெரியும் அழகழகான வளைகோடுகள் அதில் பதிந்திருக்குமே. காலத்தின் சாட்சியாகிப்போன ஆண்டுவளையங்களெனும் அக்கோட்டுச் சித்திரங்களைக் கண்டாலே, குறித்த அம்மரம் யாரிடமும் சொல்லாத தன் இளமைக் காலத்தின் பேரிரகசியங்களையெல்லாம் அதற்குள் புதைத்து வைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றும்.

 அம்மரத்துண்டங்கள் சீவிச் செப்பனிடப்பட்டு வடிவமைக்கப்படும் அகன்ற கதவுகளுக்கருகில் சென்றாலுங்கூட ஆர்வமாய் அச்சித்திரவளையங்களைத் தொட்டுத் தடவிப் பார்ப்பேன். மிக அமைதியாய் தனித்திருக்கும் அக்கதவுகளோ தமக்குள் பதித்து வைத்திருக்கும் வாழ்நாளின் மகிழ்ச்சி, நிறைவு, ஏக்கம், தவிப்பு சோகங்களையெல்லாம் தன் விருட்ச மொழியில் மிக ரகசியமாய் என்னோடு மட்டும் உரையாடுவது போலவே எனக்குத் தோன்றும்.

 சகோதரர் தீரன். R.M. நெளஸாத் அவர்களின் வக்காத்துக் குளம் குறுநாவலை முழுசாய் படித்துமுடித்து, மனசு கனத்துப்போன அமைதியான ஒரு அந்திமாலைப் பொழுதில், அந்திமக் கால விருட்சமொன்றின் பசுங்குருத்து ஈரப்பதிவுகளை மறுபடியுமாய் உள்வாங்கிக் கொண்ட பெருமித நிறைவு எனக்குள்.

 தீரன் ஆர்.எம். நௌஷாத் அறிமுகமே தேவையற்ற அற்புதமான ஓர் கதைசொல்லி. தொழில்முறையில் ஓய்வுநிலைத் தபாலதிபர்.  நாவல், சிறுகதை, கவிதை, குறும்பா மற்றும் ஆய்வுகள்... என பல்வேறுபட்ட இலக்கியப் படைப்புகளின் சொந்தக்காரர்.

 முஸ்லீம் நாவலாசிரியர் வரிசையில் 17வது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் இவரது முதல் நாவல் நட்டுமை.

  பச்சைப் பசேலெனும் வயல்களும், குளிர்ந்த வாய்க்கால்களும் அதையொட்டி வாழ்ந்த நெய்தல் நில மக்களின் மனஅவசங்களுமாய்  நீளும் அற்புத நாவலது.

 ஒவ்வொரு அத்தியாயமும் தேர்ந்த இயக்குனர் ஒருவர் இயக்கிச் செப்பனிட்ட திரைக்காட்சிகளாகவே எனக்குள் விரிந்த மிக வித்தியாசமான வாசிப்பனுபவத்தை தந்த நாவலது.

 'நட்டுமை' தவிர்ந்து, 'கொல்வதெழுதுதல் 90' (நூலாக), 'நிற்பதுவே/பறப்பதுவே/நடப்பதுவே', 'வானவில்லே ஒரு கவிதை' (இரண்டும் பத்திரிகையில் தொடராக வெளிவந்தவை) போன்ற நாவல்களும், அத்தோடு 'வல்லமை தாராயோ', 'வெள்ளிவிரல்' என்பன அவரின் சிறுகதைத் தொகுதிகளும் ஆகும்.

  'வெள்ளிவிரல்' இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றதோடு கிழக்கு மாகாண சாகித்திய விருதினையும் வென்ற நூலாகும்.

  நட்டுமை நாவலும் காலச்சுவடு நடாத்திய சுந்தர ராமசாமி நினைவு போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவலாகும்.

 இதேபோல இந்த 'வக்காத்துக்குளம்' நாவல் கூட அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி அனைத்துலக ரீதியாக நடாத்தப்பட்ட குறுநாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற நாவலென்பது சிறப்பிற்குரியது.

 இனி நாவலுக்குள் நுழைவோம்.

 வளமான வாழ்வைத் தேடிப் புலம் பெயர்ந்த சதக்கா எனும் இளைஞர் மறுபடியும் அறுபதுகளின் முதியவராய், தான் பிறந்து, தொட்டளைந்து விளையாடி வளர்ந்த தன் சொந்த மண்ணில் பாதம் பதிக்கிறார்.

 உயிர்ப்புள்ள நந்தவனமாய்... சொர்க்கபுரியாய்... இன்றளவுக்கும் தனக்குள் நின்று நிலைத்த வக்காத்துக்குளம் என்ற தனது பொன் நிலம் மாநகரமாகி மாடி மாடியாய் வீடுகள் அடுக்கப்பட்ட கொங்கிரீட் காடாய் மாறிப்போன அவலம் கண்டு பதைபதைக்கிறார்.

  தன்னிலைக் கூற்றுகளாய்... ஏக்கப் பெருமூச்சுடன் கூடிய மெல்லிய முணுமுணுப்பாய் வெளிப்படும் சதக்காவின் பால்ய நினைவுகளே இங்கு குறுநாவலாய் விரிகின்றன.

  (சிறுகதைக்கும் நாவலுக்கும் வேகம், கருத்து எனும் கூறுகள் பொருந்துவதால் குறுநாவல் எனும் இடைநிலை வடிவம் தற்போது தோன்றியுள்ளதாக எங்கோ வாசித்தது நினைவு)

 ஊரின் மாற்றங்கள் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மனசு எப்போதும் தனக்குள்ளே பால்யத்தின் பசுமையோடு உட்கார்ந்திருக்கும் நண்பர்களையும் சந்தித்து விட வேண்டுமெனப் பரபரக்கிறது.

  நண்பர்களான சண்முகம், மாலைவெள்ளி, பார்வதி, சுபைதா, குண்டான் யாவருமே நமக்குமான நட்புகள்தானே. நினைவுகளூடே வளரும் நட்புகளுக்கிடையிலான இனிய சம்பாசணைகள் நாவல் வளர்ச்சிக்கு மட்டுமன்றி பாத்திரப் படைப்பிற்கும் பண்பு விளக்கத்திற்கும் பெருந்துணையாகிப் போகின்றன.

மேலும்

 கதைச்சூழலை மிக எளிமையாய் நமக்குணர்த்தி விடுகின்றன.

  ஆசிரியர் தன்னிலைக் கூற்றாய் கூறுவதைக் காட்டிலும் சிறு சிறு உரையாடல்கள் மூலம் நாவலை முன்னோக்கி நகர்த்தியிருப்பது சுவையைக் கூட்டுகிறது.

 தரிக்கும் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பழங்கதைகள். சிறையிருந்த சீதை கரிய நிறமுடைய எதைக் கண்டாலும் தன் காதல் கணவர் தோற்றமே நினைவுக்கு வரப்பெற்று வாடினாளாம். நினைவுத் தொடர் ( Association Statement) என்பதும் கூட ஒரு உளவியல் உண்மையல்லவா?

 மண்ணுக்குள் புதைந்த தேங்காய் மட்டைகளைத் தட்டித்தட்டிச் சிதைத்துப் பெற்ற நாரிழைகளைத் திரித்து அழகழகாய் கயிறு முடிவது போலே அடிமனசுக் புதைந்துபோன தன் பால்யகாலத்து பசுமை நினைவுகள் கொஞ்சங் கொஞ்சமாய் மேலெழத் தொடங்குகின்றன.

 பூத்துக் குலுங்கும் தாமரை தடாகமும்... ஊரின் பொக்கிசமான பட்டிப்பளை ஆறும் பச்சைப்பசேலெனும் வயல்வெளிகளும்... கனவுப் பள்ளத்தாக்கும் அவரின் நினைவுகளுக்கூடே நம்மையும் குளிர்விக்கின்றன.

 அதிலும் நமது நாவல் நாயகர் சிந்தனை வீரர்... செயல்சூரர் சாந்தமாமா தோழராய்... தலைவராய்... வழிகாட்டியாய் நமதும் பிள்ளைப்பருவத்து குருவாய் மனசுக்குள் நிறைந்தபோகிறார்.

 முதல் திரைப்பட அனுபவமாகட்டும்... நீச்சலடித்ததும்... சைக்கிள் ஓடப்பழக்கியதும் தானே படகாகி நண்பர்களை ஒவ்வொருவராய் முதுகில் சுமந்து பட்டிப்பளை ஆற்றைக் கடக்க செய்ததும் தன்னம்பிக்கையோடு அவர்களின் கனவுப் பயணத்துக்கு துணையிருந்ததும் அதிலும் சிட்டுக்குருவிகளாய் இவர்களோடு ஒட்டிப் பறந்த அந்தக் குட்டிப்பெண்களையும் பாசமுள்ள தாய்ப்பறவையாய் அரவணைத்துக் கொள்வதும்... ஓ... சாந்தமாமா நீங்கள் சொந்தப் பெற்றோருடன் வக்காத்து குளத்தை விட்டும் கிளம்பியநேரம் கவலை வெடித்து இரகசியமாய் இரவுகளில் அழுதது உங்கள் நண்பர்கள் மட்டுமல்ல... நாங்களும் கூடத்தான்.

  என்னவொரு அருமையான பாத்திரவார்ப்பு. சந்தமாமா வருமிடமெல்லாம் அபூர்வ ஒளிர்வுச்செறிவு அளவிட முடியாதபடி எம் மனசுக்குள் பரவுகிறது.

 இவ்வாறு சிறுமிகளும் ஆண் பிள்ளைகளோடு சேர்ந்து  விளையாடுவதும் காடு மேடெல்லாம் அவர்கள் கூட ஒன்றாக அலைவதும் இன்றைய பொழுதுகளில் சாத்தியமா? என்ற வினா ஒருவித நடுக்கத்தோடும் அச்ச உணர்வோடும் நம் முன்னே எழுகிறது.

 இதைவிடவும் அந்த நிலக்காட்சி வர்ணனைகள்...! ப்பாஹ்... இத்தனை தாவரங்களா... ? இத்தனை விலங்குகளா...? பறவைகளா..?

 என நம்மை வியக்க வைக்கும் உயிரியல் பல்வகைமைகளின் அதிசயங்களைக் கண்முன்னே உயிர்ப்போடு நிறுத்திப் போகிறது.  

  வக்காத்துக் குளம் மாநகரமாகிய பின்னர் அவை எங்கே போய் தொலைந்தனவோ என்ற விடையற்ற வினா மொத்த மனுக்குலத்தையுமே குற்றவாளிக்கூண்டில் நிறுத்திப் போகிறது.

  உண்மையில் இது தனியாய் ஆய்வு செய்யப்பட வேண்டிய பேரவலங்களில் ஒன்று.

 இதைப்போலவே இன்றைய டியூசன் கலாசாரத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடியோடு வழக்கொழிந்து போன நமது பிள்ளைப்பருவத்து சிறுவர் விளையாட்டுகளான "சாந்தமாமா எங்கே போகிறாய்... மாட்டுக்குப் போகிறேன்...! / மாமி மாமி பன்னாடை... / ஈரெண்டு புடிச்சேன்... / ஈசோல... ஈச்சோல.. / கண்ணாண்டே புன்னாண்டே... / ஆலையிலே சோலையிலே... /  புள்ளிப்பீங்கான் விளையாட்டு/ ஓ... குச்சுப்பெட்டி... நெருப்பட்டி /குச்சு குச்சு ரயில்பெட்டி/ சீன சர்க்கஸ் கம்பெனி விளையாட்டென அத்தனை விளையாட்டு முறைகளும் நண்பர்களுக்கூடாய் நமக்கும் உணர்த்தப்படுகின்றன. உண்மையில் இவ்விளையாட்டுக் காலமே நம் பொற்காலம் அல்லவா.

 நாவலின் நகர்வினூடே வக்காத்துக்குளத்திலும் மெல்ல நாகரீகம் பரவுகிறது. கட்டட அமைப்புகள், கல்வி மற்றும் வாழ்க்கை முறை யாவுமே நாகரீகத்தின் உச்சத்தை நோக்கிப் பயணப்பட்டாலும் அந்த நாகரீகம் மெல்ல மெல்ல மக்களின் அமைதியான மனநிலையை குலைத்துப் போகிறது எனும் பேருண்மை மறைமுகச் செய்தியாய் நமக்குப் புரியவைக்கப்படுகிறது.

 'அன்று அப்படி இருந்தது இன்று இப்படி ஆகிவிட்டதே' என்ற முரண்சுவையே ஒரு கருத்து அறிவிப்பு போல வந்து (Mere statement) அவலத்திற்கு அடிப்படையாகி அவரது உணர்வுகளை வாட்டுகிறது.

 படிப்பு, பரீட்சை, வேலை... வேறுநட்புக்கள்... வேறுதளம்... வேறுவேறு உறவுகள் என இருபது வருடங்களும்.. திருமணம்... மனைவி... பிள்ளைகள்... அதன் சுமைகள் என இன்னும் பல வருடங்களும் ஓடிக் களைத்து போகிறது இந்த விசித்திர வாழ்க்கை.

 இதற்கிடையே இந்த பால்ய நட்புகள் என்னவாகி போகின்றார்கள் என்பதைச் சொல்லவரும் ஆசிரியர் நாட்டு நடப்புகளையும் அது தொடர்பான தனது பார்வையையும் நமக்கு புலப்படுத்துகிறார்.

 பார்வதி பஸ்ஸில் குண்டு வெடித்தாலும் குண்டன் காத்தான்குடிக்குப் போகும் வழியில் குருக்கள்மடத்தில் கடத்தப்பட்டும், மாலைவெள்ளி இயற்கையின் சீற்றம் சுனாமியிலும் சண்முகம் விடுதலை இயக்கமொன்றுக்காய் போராடச் சென்று காணாமல்போயும்... சுவைதா வெளிநாட்டுப் பணிப்பெண்ணாய் அரபு நாடுகளுக்கு மாறிமாறி அலைந்ததில் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுமாய் இவ்வுலகை விட்டும் நிரந்தரமாய் மறைந்து போகிறார்கள்.

 மூன்று தசாப்தத்திற்கு மேலாக நாட்டைச் சீர்குலைத்த இனவன்முறைகளும், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவுகளும் இந்த அப்பாவி மக்களின் அமைதியான அன்றாட வாழ்க்கையை எங்கனம் சிதைத்தழித்தது என்பதை இந்த வாசிப்பினூடே உணர்ந்து கொள்கின்றபோது மனசு கனத்துப் போகிறது.

 கூடவே மதபேதங் கடந்து தமிழ் அரசினர் கலவன் பாடசாலையாக இருந்த ஒரு பாடசாலை காலவோட்டத்தில் பெயர் மாற்றப்படுவதனூடாய் தனிச்சமுதாயமாய் ஒடுங்கிப் போனதையும் போகிற போக்கில் பதிவாக்கியுள்ளார்.

 சரி.. எங்கள் நாவல் நாயகர்..  கனவுத்தோழர் சாந்தமாமா இறுதியில் என்னவாகிறார்...?

  அவரை சதக்காவான  கதைசொல்லி என்ன நிலையில் வாசகரை சந்திக்க வைப்பார்...?

 அந்த உன்னத வீரரைப் போதையுடன் கூடிய கனரகசாரதியாகவோ இல்லை வீதிக் கடையொன்றில் எடுபிடியாகவோ நாம் கண்டுவிட வேண்டாமே என்று வாசகரின் உள்மனசு பரபரக்கப் போவதைக் கதைசொல்லி எப்படித்தான் உய்த்துணர்ந்தாரோ தெரியவில்லை.

 'ஆசையை விட்டவர்களே எல்லாத் துன்பங்களையும் விலக்கி மோட்சமடைகிறார்கள்.' என்ற புத்தரின் இறைஞான வரிகளை அளவிறந்த ஆற்றலுடைய சாந்தமாமாவினூடாகவே நமக்குக் கதைசொல்லி புரிய வைக்கிறார் என்பதை மட்டும் இங்கே சொல்லி வைப்போம்.

 ஏழு வயதில் விளையாட்டாய் சந்தமாமா பாடிக்காட்டிய சிறுவர் பாடலொன்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை எழுபதுகளின் முழுமையாய் புரிய வைக்கிறார்.

 இதனூடாக இந்நாவலின் கதைப்பின்னல் (Plot) தத்துவச்சார்பு கொண்டதாகவே நம்மால் உணரமுடிகிறது.

  இந்நாவல் தரும் வாழ்க்கை பற்றிய மதிப்பீடு மிகத் துல்லியமானது. விசாலமானது.

 இனி எஞ்சிய காலமெல்லாம் வக்காத்துக்குளமும் அதன் நித்திய ஹீரோ சாந்தமாமாவும் நம் நினைவுகளுடன் கூடவே பயணப்படப் போவதைத் தவிர்த்திட முடியாது போலும்.

  வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

 எஸ். பாயிஸா அலி

கிண்ணியா