Saturday, January 27, 2024

உவைஸ் முகமட்

  

உவைஸ் முஹம்மட்டின் உயிர்-மெய் எழுத்துக்கள்...


குறுமுனியாக இருந்து இன்று வாமன அவதாரம் எடுத்துள்ள முகநூல் வாயிலாகத்தான் நண்பர் உவைஸின் சில கவிதைகளை பார்க்க நேர்ந்தது... மானுட உணர்ச்சித் தூண்டலை உண்டாக்கும் பல செறிவான வரிகளை உவைஸின் பதிவுகளில் கண்ணுற்ற போது இவர் நம் மண்ணின் இன்னொரு பிரவாகமாக ஊற்றெடுத்துப் பாய்வார் எனக் கணித்திருந்தேன்.. நம் கணிப்பு பொய்யாகவில்லை...

அவரது ஒட்டு மொத்த எழுத்துக் குவியலுக்குள் மூன்று நாட்களாக புதைந்து கிடந்தேன்.. உயிரையும் மெய்யையும் ஒரு உணர்ச்சி மையத்தில் பிணைக்க அவர் எடுத்திருக்கும் அபாரமான முயற்சி வரவேற்கத்தக்கது.. சூரியனையும் நிழலையும் நதியையையும் அதன் ஈரலிப்பையும் தன் விரல்களுக்குள் சேமித்து வைத்துக்கொண்டு நம்மை நோக்கித்  தொட்டுத் தெளிக்கிறார்.. அந்த விசிறலில். தீச்சுடர்களும் ஈரச் சிலிர்ப்புகளும் சிதறியடிக்கின்றன ..
.
இதனூடே ஒரு சமூகப் பிரக்ஞையை இவரால் நிறுவ முடியுமா என்றால் தலைப்பில்லா கவிதைகள் ஊடே தரவுகளை தருவது மட்டுமே என் வேலை என்கிறார்... உள்மன வெளியில் உல்லாசமாக உலவித்திரியும் சொற் சிதறல்களை ஒரு கட்டிறுக்கமான சட்டகத்துள் பிணைக்கின்ற அசகாய சாதுரியம் இவருக்கு கைவந்துள்ளது என்பேன்...

வெற்றுக் கற்பனாவாதங்களை விட்டும் அப்பாற்பட்டு வாழ்வியலை ஒரு வித்தியாசமான கண்ணாடியூடே பார்க்கின்ற எத்தனத்தில் நம்மையும் அழைத்துச் செல்கிறார்... வெறிகொண்ட வார்த்தைகள் இவரைக் கைது செய்ய அலைகின்ற போது அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள அவர் பூசிக்கொள்ளும் அரிதாரங்கள் நம்மை மலைக்க வைக்கின்றது...

இரவை ஒரு குவளையில் ஊற்றி  ஒற்றை மிடறில் குடித்து விட எத்தனிக்கின்ற உவைஸ் முஹம்மட்டின் சாதுரியம் அவரது வரிகளில் பளிச்சிடுகிறது...


தன்  கனவைச் சுருட்டி யன்னலால் எறிந்த போதும்,உயிர் திரண்டு வந்து தொண்டைக்குழியில் சுரந்து நிற்கும் போதும் கடலைப் பிழிந்து நீலத்தை தனியாகப் பிரிக்கும் போதும் தன்னை தற்காலக் கவிஞர்களிலிருந்து பெருமட்டுக்கு வித்தியாசப்படுத்தி காட்சிப் படுத்தியிருக்கும்  நண்பர் உவைஸின் வரிகளில் காட்சிகளின் சிறைப்பிடிப்பு அபாரமாகப் பொருந்தி வருகிறது...
கவிதைப் பெருவெளியில் இனி உவைஸ் முகம்மத் இன்னொரு ஆச்சரியப் புது வெள்ளமாகப் பாய்வார் என்ற நம்பிக்கை  வருகிறது ...தலைப்பில்லா கவிதைகள் தந்திருக்கும் கவிஞருக்கு நமது வாழ்த்துக்கள்...

    தலைப்பில்லா கவிதைகள் --..- உவைஸ் முஹம்மட்- வெளியீடு   மருதம் கலைக்கூடல் மன்றம்