Sunday, February 18, 2024

வல்லமை தாராயோ...’ நூலுக்கான முன்னுரை- ஏ.பீர்முகம்மது.

 

‘வல்லமை தாராயோ...’   நூலுக்கான முன்னுரை- ஏ.பீர்முகம்மது.

 

2000.04.03

11.45. PM

அன்புடன் தீரனுக்கு,

தங்கள் சுகத்துக்கு இறைவனிடம்  விண்ணப்பம்.  ‘வல்லமை தாராயோ..’ என்ற சிறுகதைத் தொகுப்பு  எனது பார்வைக்கு கிடைத்தது. நன்றி.

முதலில் நுனிப்புல் மேய்ச்சலாகவும், பின்னர்  நுணுக்கமாகவும் வாசித்ததால்  ஏற்பட்ட எனது கருத்துக்களை மடலாக இங்கு எழுதுகிறேன், இது நீண்ட கடிதம் என்று நினைத்தால் மன்னிக்கவும்.

‘வல்லமை தாராயோ..’ என்ற தங்களின் இந்த நூல்  சிறுகதைத் தொகுப்பொன்றின் சகல தாரதம்மியங்களையும் கொண்டுள்ளதா... சமுகத்தின் சகல பிரக்ஞைகளையும்  அது வெளிக் கொணர்ந்துள்ளதா.. இது போன்ற பல கேள்விகள்   என்னுள் எழுந்தன.  ஆனால் நான் தங்களின்  நூலை  ‘ஸ்கேனிங்’ செய்து பார்க்கவில்லை.  பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கு இருக்கவில்லை.  சாதாரண ஒரு வாசகனின் பார்வையில்  எதுவெல்லாம் தோற்றம் பெறுமோ  அந்த நிலைப்பாட்டில் நின்றே  இதனைப் பார்த்தேன்.

அதுசரி, சிறுகதை எழுதும் இந்த ஆற்றலை  அல்லது வல்லமையை  நீங்கள் எப்படிப் பெற்றீர்கள்..  என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சாதாரண ஒரு எழுத்தாளனாக மட்டுமே  உங்களைக் கண்ட எனக்கு  உங்களின் திறமை  எனது தராசுத் தட்டுக்கே  தண்டனை கொடுத்தது.

0

எட்டுக்கதைகள் எண்ணிக்கையில். ஆனால் அவை ஒவ்வொன்றும், சிறுகதை உலகுக்கு சீதனம்தான்.

‘அணிலே..அணிலே ஓடி வா..!’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது.  அதில் காணப்படும் பாத்திரங்கள் நிஜமானவை மட்டுமல்ல  உயிரோட்டமுள்ள பாத்திரங்களும் ஆகும்.  நீங்கள் ஒரு தபாலதிபர் என்ற வகையில்  அனுபவங்களைக் கதையாக பீச்சியுள்ளீர்கள்.  நமது தேசிய நீரோட்டத்தின்  பின்புலங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிய பாங்காக விளக்கியுள்ளீர்கள்.  இந்த அணில் கதை பற்றியும்  ‘மலர்வு 74 உதிர்வு 98 ‘ என்ற கதை பற்றியும் உங்களுடன்  நேரிடையாக கலந்துரையாடலாம் என்றிருக்கிறேன்.

ஏனெனில் இவ்விரு கதைகளும்  என்னை மிகவும் கவர்ந்தவை.  தீரன் அவர்களே,  நீங்கள் எழுதிய கதைகளில்,  உங்களுக்குப் பிடித்தமான  கதைகளை  எனக்கு அனுப்பி வையுங்கள்.  அவைபற்றியும் உங்களுடன்  கலந்துரையாட மிக்க  விருப்பம்.

இந்த மடலில் நான் இன்னொரு விடயத்தையும் தொட்டுக்காட்டுதல் சிறப்பு என நினைக்கிறேன்

‘கனவுப் பூமி’ என்ற கதை இருக்கிறதே, அது அபாரம். இன்னும், சில வருடங்களில், அது நிஜமாகிவிடும்.  அணில் கதைக்கு அனுபவம் இருந்தது.  ‘கவவுப் பூமிக்கு’ கற்பனை எங்கிருந்து வந்தது..?

சாதாரணமாக சிறுகதை என்ற பெயரில்,  ‘சிறு சிறு கதைகளை’ எழுதும்,  ‘நம்மட ஆக்களுக்கு’ மத்தியில்  உங்கள் கதைகள்  ஒரு தனி முத்திரைதான்.  கனவுப் பூமியின் மூலம் நீங்கள் ஓதர் சி கிளார்க் (ஆதர் என்பது இந்தியத் தமிழா?)  ஆகிவிட்டீர்கள்..

‘நல்லதொரு துரோகம்’ கதையும் பரவாயில்லை. வழமையான கதைதான்.  ஆனால் இராணுவப் பூச்சு.   ‘மலர்வு 74 உதிர்வு 98 ‘ எனும் கதைக்கும் இதே தலைப்பை இட்டுப் பார்த்தேன்.  நீங்களும் அவ்வாறு யோசித்துப் பாருங்கள்.

‘சீனத்’ என்ற கதையில், நீங்கள் கண்ட பாத்திரங்களும் அவர்களின் உரையாடல் மொழிகளும்  சரளமாக உண்மைகளைத் தெரிவிக்கின்றன.  ஆனால் என்ன செய்ய?  நீங்களும் நானும் வாய் மூடி மௌனியாக இருக்க வேண்டியதுதான்.  ஏனென்றால்  சிறுகதைகளால் ஒரு சமுகம்  திருந்த முடியுமென்றால்,  நாம் சிறுகதைகளை  எழுத ஆரம்பிக்க முன்னரேயே  சமூகம் திருந்தியிருக்கும்.

E=ஓம்’  என்ற கதையின் பாத்திரங்கள்  ஈருலகத் தொடர்பை கொண்டிருப்பதாக  அல்லது  விஞ்ஞானமும், மெய்ஞானமும்  ஒன்றாகியிருப்பதாக  எனது உணர்வு.  இது போன்ற கதைகளில்  நீங்கள் சொல்லும் விடயங்கள்  சற்று ஆழமானவை போல தெரிவதால்,  ‘அதீத கதைகளா’கவே  அவற்றை நாமம் பொறிக்க வேண்டியுள்ளது.  ஆனால் கதைகளில் தரம் தெரிகிறது.

‘சாந்தி’ என்ற கதை  பிரச்சினைக்குரிய ஒரு விடயத்தை தொட்டு நிற்கிறது.  குழந்தைக்குப் பெயர் வைக்கும் விடயத்தில்,  மனைவியுடன் எதிருணர்வு கொள்ளும்  கணவனின் வாதம்  வெறும் குதர்க்கவாதம்தான்.  கீத் கேண்டில் மைனஸ் வேக்ஸ் (Keyத் Candle- Wax) சமன் சாவித் திரி  என்ற தோற்றத்தின் அடிப்படையில்  வாதம் முன்வைக்கப்படுகிறது.  எது எப்படியிருந்தாலும்,  கதையின் கடைசி வரி  யாதார்த்தத்தின் யதாத்தமாகவுள்ளது. அதுதான் உங்கள் ஆளுமை.

0

அன்புள்ள தீரன் அவர்களே,

எட்டுக் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து புத்தகமாக்கியுள்ளீர்கள்.  அதுவும் அனேகமானவை பரிசு பெற்ற கதைகள் என்று  நினைக்கின்றேன்.

உங்கள் கதைகளுக்கு பரிசு தந்தவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.  ஏனென்றால்  நல்ல கதைகளுக்கு  பரிசு கொடுத்ததாக  அவர்கள் பாராட்டப்படுவார்கள்.

நேற்று உங்களைத் தேடி வந்தேன். தங்கள் வீட்டில் தகவலும் கொடுத்தேன்.  இந்த நூற்றாண்டின்  எஞ்சிய நாள்கள்  ஒவ்வொன்றும் உங்கள்  பேனாவைத் திருடிக் கொள்ள திட்டம் போடும். கவனமாகவிருந்தால் காற்றும் உங்களுக்குக் கடிதம் போடும்.

விடுதலை உணர்வுக்கு  விண்ணப்பம் செய்யும் கதைகள் பற்றியும் கவனம் செலுத்துங்கள்.  வானத்தில் பிரகாசிக்கும்  வண்ணவண்ண நட்சத்திரங்களைப் போல உங்கள் எழுத்து வாழ்க்கை பிரகாசிக்க  எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்

ஏ. பீர்முகம்மது

B.A. Dip.Edu. SLEAS.

அதிபர்.

சாஹிரா தேசியக் கல்லூரி

 

 

No comments:

Post a Comment