துய்யோன்.ஏ.எச்.ஏ. பஷீரின் ‘பிராயச்சித்தம்” நூலுக்கு அளித்த முன்னுரை.(2 0 2 2 )
எழுத்துக்கு இறக்கை வைத்துப் பறத்தல்...
பஷீர் சேரின் உயர்ந்த கல்விப் பணிகள் பற்றி நம் சமுகம் அறிந்தே வைத்திருக்கிறது.. ஆயின் அவருக்குள்ளிருக்கும் ‘துய்யோன்’ என்ற கதைசொல்லி பற்றித்தான் நமக்கு இங்கே பேச்சு. ஏற்கனவே சில சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய ‘அவள் செத்துக்கொண்டு வாழ்கிறாள்’ என்ற படைப்பையும், ‘ஒரு பூ மீண்டும் மலர்கிறது ‘ என்ற நவீனத்தையும் தந்தவர் அவர்.
இப்போது ‘பிராயச்சித்தம்’ என்ற இந்த சிறுகதை தொகுப்பு வந்துள்ளது. இதிலுள்ள கதைகள் ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கு முன்னர் அவரால் எழுதப்பட்டு தினபதி-சிந்தாமணி-வீரகேசரி-ராதா போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தவை.. இத்தொகுதியில் உள்ள அவரது அக்கால ‘நிர்மானிப்புகள் ‘துய்யோன்’ என்ற அவரது இலக்கியப் பிம்பத்தை வேறு ஒரு விதமாக கட்டமைத்து நமக்கு காட்சிப் படுத்துகின்றன .. அவரது கல்வியியல் நெறி அவரது எழுத்துகளில் வியாபகமாகச் சூழ்ந்துகொண்டுள்ளதை இக்கதைகளின் ஊடே நம்மால் தரிசிக்க முடிகிறது..
முடிந்த வரை ஒப்பனைகள் நீக்கிய மிகையுணர்ச்சி தவிர்த்த படிமங்கள் அற்ற எழுத்து துய்யோனுடையது... இதனால் பாத்திரங்களின் குனாதிசயக் கலவையை விஸ்தாரமாக விபரிக்க வேண்டிய ஒரு கட்டாய இடர்பாடு சில இடங்களில் ஒரு கதைசொல்லிக்கு ஏற்படுகின்றது.. இவ்வாறானதொரு ‘ரண சிகிச்சையை’ துய்யோன் அக்காலத்திலேயே செய்து பார்த்திருக்கிறார் என்பது இக்கதைகளை வாசிக்கும் போது புரிகிறது .... இது புனைவுகளின் கடந்தகால வெளியை இன்னும் அகலமாகத் திறந்து பார்க்க உதவுகிறது
யாருடைய பாதிப்பும் இல்லாமல் தன் எழுத்தை மட்டுமே நம்பி நெடுகிலும் தானே கதையைச் சொல்லியும் தானே சில சமயங்களில் ஒரு பாத்திரமாகவும் ஒரு வாசகனாகவும் இருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதும் துய்யோனின் தனிப் பண்பாக இருக்கிறது.
‘ஆசிரியப்பணி’- ‘தண்டனைகள் தீர்வாவதில்லை’- ‘பழி’ போன்ற- கதைகளின் தாக்கம் மிக இலகுவில் வாசகரை தொற்றிக் கொள்கிறது.. ‘ஆதங்கம்’ ஓர் அதிபரின் ஆற்றாமையை அபாரமாகச் சொல்கிற கதை. ‘நிறைவு’ என்ற கதை ஹராம்-ஹலால் என்ற கருப்பொருளை மையச் சரட்டாக வைத்துச் சுழல்கிறது... இவற்றுள் ‘கல்வி அதிகாரி பாடசாலைக்கு வருகிறார்’ என்ற கதை உச்சக்கட்ட கல்விசெயற்பாடுகளையும் ஆசிரியர் அதிபர்களின் புறக்கிருத்தியப்பணிகளையும் மாணவர் அடையவேண்டிய உச்ச அடைவுமட்டத்தையும் விஸ்தாரமாக விபரிக்கும் தன்மையது.. கல்வி மாபியாக்கள் கோலோச்சும் இக்காலகட்டத்துக்கு ஒரு பரப்புரையாக சொல்ல வேண்டிய கதை இது.
தொகுதியிலுள்ள ஒவ்வொரு கதையையும் பற்றிய பரந்துபட்ட ஓர் உரையாடலுக்கு இச்சிறு உரையில் முடியவில்லை ... வேறு ஒரு சந்தர்ப்பத்தில் துய்யோனின் படைப்புலகில் முழுமையாக சஞ்சரிக்க வேண்டிய இலக்கியக் கடமை நமக்குண்டு..
துய்யோனின் எழுத்துகளில் மகா ஆடம்பரங்கள் இல்லை. அதிக இழிந்த மொழிகளும் இல்லை தனது கதை விளக்கம் மற்றும் பல குறிப்பு விபரங்களை முக்கிய பாத்திரங்களின் இயல்புகளை இலகுவாக விபரித்துச் செல்கிறார் .ஒரு புழுவுக்கு சிங்காரமான இறக்கைகள் வைத்துப் பார்ப்பதில் அவர் சமரசம் கொள்ளவில்லை என்பது புரிகிறது. மற்றது அவர் தன் கதைகளைத் தேடி விண்வெளிக்குச் செல்லவில்லை. தன்னைச் சுற்றியுள்ள மேய்ச்சல் வெளியிலேயே வேண்டியளவு மேய்ந்துவிட்டு ஆறுதலாக உட்கார்ந்து அசைபோட்டிருக்கிறார். அதற்காக இக்கதை சொல்லியை நாம் எவ்வளவும் பாராட்டலாம்.
அல்ஹாஜ் ஏ.எச்.ஏ பஷீர் சேர் அவர்கள் ‘அதிபர் திலகம்’ .. கலைத்தீபம்- பல்கலை ஒளி போன்ற பட்டங்களையும் கலாபூஷனம் விருதையும் பெற்றவர். கல்வியியல் மற்றும் எழுத்தியல் துறைகளுக்கு அப்பால் சேர் அவர்கள் ஒரு நுண்கலைகள் நிபுணர் ஆவார். கல்முனை பாளிகாவில் இவர் அமைத்துள்ள நிர்வாக கட்டிடம்- பசுமைப் பூங்கா முதலான பல்வேறு நிர்மாணிப்புகள் அதற்குச் சான்றாக உள்ளன..மேலும் சமுதாயப் பணியில் ஓர் அரசியல் செயற்பாட்டளாராகவும் இருந்தார். 2௦........ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளராக போட்டியிட்டிருந்தார்... .
சேர் அவர்களின் 26 ஆண்டு நீண்டகால ‘அதிபர் சேவைக் காலம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் ஒரு பொற்காலமாக வர்ணிக்கப்படுகிறது. கல்லூரியின் பருவகால வெளியீடுகள் அனைத்துக்கும் ஓர் உந்துவிசையாக இருந்தவர் . 1975 களில் கல்முனை சாஹிறாவில் ‘அம்பு’ என்ற விஞ்ஞான சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்தவர்..சாய்ந்தமருதின் இலக்கிய வரலாற்றில் முதல் குறுநாவல் எழுதிய பெருமையும் இவருக்குண்டு. எம்மைப் போன்ற பல எழுத்தாளர்களின் இலக்கியச் செயற்பாடுகளுக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தியவர்..
எழுத்துக்கு இறக்கை வைத்துப் பறக்கும் துய்யோன் என்ற இலக்கிய வல்லூறின் பின்னால் ஒருசிறு மின்மினியாக நாமும் தொடர விரும்புகிறோம்.... அத்துடன் அன்பான எங்கள் குருவை மனதார வாழ்த்திப் பணிகிறோம்..
No comments:
Post a Comment