Thursday, December 28, 2023

விமல் குழந்தைவேலு

 

விமல் குழந்தைவேலுவின்வெள்ளாவி நாவலுக்கு அளித்த முன்னுரை (2 0 1 8)

 

 

வண்ணாரைக் ‘குறி’ வைத்த ‘’வெள்ளாவி’’

 

 விமலின் வெள்ளாவி நாவலை முழுமையாகப் படித்து முடித்த போது வண்ணார்களின் மத்தியில் நான் இரண்டாவது தரம் வாழ்ந்தேன்.. என் சின்ன வயதில் நான் சலவைத் தொழிலாளர் மத்தியில் நன்றாகப் புழங்கியிருக்கிறேன்.. சாய்ந்தமருது தமிழ் குறிச்சியில் எங்கள் அல்அசல் முழுக்க வண்ணார் இனத்தவரே குடியிருந்தனர்...அக்காலத்தில் என்னோடு வண்ணாரப்பெரியான்-மலர்- மாலையன்..வண்டு-பாக்கியராசா- ஊதிப் பார்க்கும் காத்தான்....தம்பிராசா...பார்வதி.....இன்னும்பல நண்பர்கள்...அவர்களின் வேலிகள் இல்லாத குடிசைகள்...முற்றத்தில் துணி மலைகள்...வட்ட வட்டமாக ஆதிசேடன் பாம்பு போல வெள்ளாவிக் கும்பங்கள்...அழுக்கு மூட்டைகள்..மினுக்கும் மேசை.. குறி வைக்கும் மைக்கீசா .... வளவுகள் ஊடே நடந்தால் அவர்களின் நாகதம்பிரான் கோவில்.. கொஞ்சம் பக்கத்தில் பட்டிப்பளை ஆறு..கரை முழுவதும் பாரிய வெளுக்கும் கற்கள்...அதிகாலையிலேயே ஷ்ஹ்சப்பாஹ்.. ஷ்ஹ்சப்பாஹ்...என்று துணி வெளுக்கும் தொழிலாளரின் ஒலிகள்....இவர்களின் சடங்குகள்..சம்பிரதாயங்கள்...எல்லாம் மறுபடி என் கண்முன்னே...இந்த வெள்ளாவி நாவலில்.........என்ன ஒரு அபூர்வ மனிதர்கள்... வெள்ளாவிக்கு ஒரு உரை எழுதும்படி நண்பர் ஏறாவூர்சப்ரி என்னை வேண்டிக்கொண்ட போது அந்த அமைதிக்காலத்தில் அழிந்து போனேன்...

 ௦௦

 திருயாகத்தில் மூழ்கியிருந்த தட்சணையையும் தேவர் தேவிகளையும் அழிக்கத் திருவுளம் கொண்ட சிவபெருமானும்உமையும் முறையே வீரபத்திரரையும்காளியையும் படைத்து ஏவி விட்டனர்...இதன்படி வீரபத்திரர் தேவர்களையும் காளி தேவிகளையும் கொன்றொழித்தனர்..

 மீண்டும் தேவ தேவியருக்கு உயிர் கொடுத்த சிவன்..இவர்களின் ஆடைகளில் இருந்த குருதிக் கறைகளை போக்க ஒரு பெருமழை பொழிவித்தார். அப்போதும் கறை போகாததால் வீரபத்திரரின் மரபிலேயே ஒரு வீரனை தோற்றுவித்து தேவதேவியரின் ஆடைகளை வெளுக்க ஆணையிட்டார்.. இவனின் பரம்பரையினரே வண்ணார்கள் எனப் பேர் பெற்றனர்...திருக்குறிப்புத் தொண்டரும் போகர் சித்தரும் இந்த வண்ணார் மரபில் பிறந்தோரே.....வண்ணார் இனத்தோரின் தோற்றம் பற்றிய மேலும் சில விந்தையான இதிகாசக் குறிப்புகள் பல காணக் கிடைக்கின்றன...

 ௦௦

தமிழக எழுத்தாளர் வெ. அண்ணாமலை (இமையம்) அவர்களின் கோவேறு கழுதைகள்’’ நாவல் புரத வண்ணார்களின் வாழ்வியலை பேசும் ஒரு புதினமாகும்..

 விமல் குழந்தைவேலு வின் வெள்ளாவியும் நம்மருகில் வாழ்கின்ற வண்ணார் சமுக மக்களின் விளிம்பு நிலை வாழ்வியலை சித்திரப்படுத்தியிருக்கிற ஒரு முக்கிய புதினம் ஆகும்.,.வெள்ளாவி நாவலில் வண்ணார் சமூகவியலின் இயல்புகளும்,இருப்புகளும் மையப் படிமமாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன எனலாம்..

 வெள்ளாவி நாவல் முழுக்கவும் தீவுக்காலை என்ற கிராமத்து வாழ் மனிதர்கள் சஞ்சரிக்கின்றனர்....பரஞ்சோதி- மாதவி-நாகமணி-சதாசிவம்- போடியார்- சாமித்தம்பி- வரதன்...காசாத்தை பெத்தா...என்று நிஜமான மனிதக் குணசித்திரங்கள்.....

 ஒரு சராசரியான ‘’கதை’’க்குரிய அம்சங்களை முற்றாகப் புறம்தள்ளி நிகழ்வுகளின் யதார்த்தப் பெறுமானத்தை நாவலில் வீழ்படிவாகக் காட்டியுள்ளார் விமல் குழந்தைவேலு..

 ஒரு குறிப்பிட்ட இனக் குழுமம் பற்றிய புனைவை அக்குழுமத்தின் பேச்சு மொழியில் புதினம் நெடுகவும் சொல்லிச் செல்வது எத்துணை கடின பணி...அதை மிக அவதானத்துடனும் சற்றும் பிசகின்றியும் இலாவகமாகவும் கையாண்டுள்ள விமலின் ‘’மொழிஆற்றல்’’ நம்மை மலைக்க வைக்கிறது...

 சூனியம் வைத்தல்-கழிப்புக் கழித்தல்- பைரவன்-காளிகளின் பார்வை- திருமணச் சடங்குகள்- சாமர்த்திய சம்பிரதாயங்கள்-கூரை முடி கட்டுதல்- மாத்துக் கொடுத்தல்- தீட்டுத் துணி எடுத்தல்-கலியாணம் பண்ணி வருதல்-தூமை வெளுத்தல்-வண்ணான் கடமை செய்தல்- கோவில் கதவு திறத்தல்- நேர்த்தி-கண்ணகிக் குளிர்த்தி- தெய்வமாடுதல்- கூத்து- பணக்கார வண்ணார்களின் கெடுபிடி- வண்ணாரப் போடிகளின் ஆளுமைஅவர்களின் விபச்சார மரபு......இப்படி இந்த அடிக்கோட்டு மக்களின் வாழ்வியல் கூறுகள் அனைத்தையும் பகைப்புலக் காட்சிகளாக நாவல் முழுவதும் வரைந்து நம்மையும் தீவுக்காலையில் வாழ வைத்துவிடுகிறார் விமல் குழந்தைவேலு....

 பரஞ்சோதியின் கர்ப்பத்துக்குக் காரணமான போடியாரிடம் நீதி கேட்கப் போன மாதவிக்கு கிடைத்த பதில் .......’’....பப்பாசிப் பிஞ்சையும் அன்னாசிப் பிஞ்சையும் சப்பித் தின்னக் குடு...ஒரு பங்கு சூர மீன் வாங்கி ஆக்கித் தின்னக் குடு..ஒரு துவாலையோட எல்லாம் போயிரும்........’’’’ ..! என்ன ஒரு பதில்.....துணுக்குற்றுச் சுருள வைக்கும் வரிகள்.....

 பல்லாயிரம் பிரச்சினைகள்.. அவமதிப்புகள் ஊடே வாழ்ந்து வரும் இம்மனிதர்களின் வாழ்வில் ‘’ஈழப்போர்’’ மெதுவாக உள்நுழைய ஆரம்பிக்கிறது... சாதிப் பாகுபாடுகளை தற்காலிகமாயினும் ஒத்திப்போடும் ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுகிற தருணத்தில் நாவலை முடித்துவைக்கிறார் விமல்,

 வெள்ளாவி நாவலுக்கான கேள்வி நுகர்ச்சிகள் அதிகரித்து விட்ட நிலையில் அதன் பிரதிகள் இலங்கையில் எங்கும் கிடைப்பதாகவில்லை....இதனால் வெள்ளாவியின் இரண்டாம் பதிப்பு மட்டுமல்ல அதன் இரண்டாம் பாகமும் அத்தியாவசிய தேவையாகி விட்டிருக்கிறது......

 தீரன்.ஆர்.எம். நௌஷாத்

சாய்ந்தமருது 2018.08.08

 

No comments:

Post a Comment