Thursday, December 28, 2023

மஷூறா சுஹுர்தீன்

 

மஷூரா எழுதிய ‘’நதிகளின் தேசிய கீதம்’’    கவிதை நூலுக்கு அளித்த முன்னுரை.(2 0 2 0 )

 

 

பட்டாம்பூச்சிகளுக்குத் துப்பாக்கி அணிவித்தல்

 

 

கவிதைகளுக்குள் ஒழிந்திருக்கும் மானுடம் பற்றிப் பேசுதலே உன்னதமானது என்பர். ஆயின் எல்லாக் கவிதைகளும் அறம் போதிப்பது மட்டுமே என்றில்லை. அடர்வனத்தில் துப்பாக்கி ஏந்தியபடி  பறக்கும் பட்டாம்பூச்சிகளும்  கழுத்தில் சயனைட் வளையம் கட்டிக் கொண்டு  பேசும் ஆரக் கிளிகளும் கூடத்தான்  தினமும் கவிதைகள் எழுதுகின்றன..

 

கவிதைகளால் மூழ்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில்,  உதைத்து உந்தி மேலே  எழுந்தோர் ஒரு சிலரே,,.. உலகமும் அவர்களை  ஏற்றுக் கொண்டது.  ஏனையோர் அடியில் தங்கி விட்டனர்

 

மஷூராவின் எழுத்துக்களோடு நாம் எந்த வகையில்  சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்பது  அவரது கவிஈர்ப்பு விதியின் பாற் பட்டது. தவிரவும் மஷூராவின் நீணடகால  எழுத்தின் உதிர்வு  அவரது படைப்புக்களில் விரவியுள்ளதா எனவும்,  அவரது இன்றைய காலக் கவிதைகளில்,  அவர் வலியுறுத்த விரும்புகிற  பிரகடனம் என்ன  என்பதையும்  இத்தொகுதியில் பார்த்து வந்தேன்.

 

‘’......... கலாச்சார மீறல்களில், குளிர்காய்ந்து, பெயருக்கு புகழுக்கு என்னால்  என்னால் எழுதமுடியாது. பெண்மையின் வரைவிலக்கணத்தை மீறி  எழுதுதலில் எப்போதும்  எனக்கு உடன்பாடு இல்லை ..உண்மைகளைப் பட்டென உடைப்பதில்  தயக்கமுமில்லை.  பெண்ணுணர்வுகளை நசித்துப் போட்டு  தன்னை நிலை நிறுத்தும் முகமூடிகளின்  முகத்திரை கிழிப்பதிலும்  எனக்கெந்த வெறுப்புகளுமில்லை.. உள்ளதை உள்ளபடி  உரைப்பதிலும்  பின் வாங்கேன் . எனினும், என் கலாச்சாரத்தை  மீறுவதாலும்  பெண்ணியல்பை புதைப்பதாலும், புகழ் வருமெனின்.  எனக்கது தேவையுமில்லை. என் படைப்புக்களை  வழி நடத்த  எனக்கெந்தச் சாரதியுமில்லை. நான் தனித்துவமானவள்.  ஆனாலும் எதார்த்தவாதி...’’

 

மஷூரா தன்னைத் தானே  அறைந்து கொண்டிருக்கும்,  மேற்படி கொள்கைச் சிலுவை பற்றி  நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.  சாரதி இல்லாமல்  தன் படைப்புக்களை  வழிநடத்திச் செல்வதில்  அவருக்கு இருக்கிற துணிவை  பாராட்டாமல் எப்படி இருக்கலாம்.?

 

மஷூராவின் எழுத்துக்குள் ஊடுபாவும், பெண்ணியல் மற்றும்  சமூக முரண்பாடுகளின்  மீதான ஆக்ரோஷம்  போன்றன  ஒரு கத்திமுனை போலவும் அவரது ஆசிரியப்பணி,  மற்றும் அவர் பழகும்  சிறார்களின் அழகிய உலகமும்  அதே கத்தியின்  இன்னொரு முனை போலவும்  சறுகாமல் சுழற்றும் உத்தியை  அல்லது திறமையை பாராட்டவே வேண்டும்..  மஷூராவின்  எழுத்துக்களை  திறன் நோக்கு செய்வதற்கும்  சிறிய சத்திர சிகிச்சை ஒன்றை  நிகழ்த்துவதற்கும்  இந்த முன்னுரை ஏற்ற ஒரு இடமல்ல..

 

இலங்கை கிழக்கு மாகாணம்  மாவடிப்பள்ளி அஷ்ரப் மகா வித்தியாலயத்தில்  ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிற மஷூரா 1982 களில்,  தென்கிழக்குப் பிரதேசத்தில்  இருந்து பீறிட்டு எழுந்த  ஓர் இலக்கியக் காட்டாறு. தந்தை அப்துல் மஜீத். தாய் சுபைதா.  அக்காலத்தில் சம்மாந்துறை மஷூரா . மஜீத்  என்ற பெயரில்  தன்னை அடையாளப் படுத்தியவர். . திருமணத்தின் பின்  மஷூரா சுஹுர்தீன்  என்ற பெயரில்  எழுதி வருகிறார்.  கவிதை, சிறுகதை, நாடகம். சித்திரம் ,ஓவியம், கைப்பணி என்பன  மஷூராவின் ஈடுபாட்டுத் துறைகள் ஆகும்.

 

தன் பாடசாலைக் காலத்தில்  எழுத்துத் துறையில் சில இருட்டடிப்புக்கள், கழுத்தறுப்புக்கள் என்பவற்றை எதிர்கொண்ட  மஷூரா வளரும் ஒரு செடியைக் கிள்ளிப் போட்டால்  அது தன் கிளையிலாவது   அரும்பு விட்டு

முன்னரை விட வேகமாக  வளரும் நிலையை  தன்னுணர்வாகக் கொண்டு  மேலெழுந்தவர்.  அந்தப் போராட்டக் குணம்  இன்றும் இவரது  படைப்புகளில்  முனைப்புப் பெற்றுள்ளதை  காண முடிகிறது.

 

எனினும் தன் சமயக் கோட்பாடுகளை அதற்கேயுரித்தான  கலாச்சாரப் பண்பாடுகளை  மீறி எழுதி புகழ் பெறும் போலித்தன்மையை வெறுக்கிறார். தன் படைப்புக்களை இஸ்லாம் காட்டும்  நெறியின் அடிப்படையில் அமைவதில் கரிசனை கொண்டுள்ளார். மஷூரா ஒருபோதும் எழுத்தைக் கை விடவில்லை.. எழுத்தும்  மஷூராவை விடவில்லை.  கணவர் சுஹுருத்தீனின்  நெஞ்சார்ந்த ஒத்துழைப்புடன்  தன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார்..

 

எழுவான் கதிர்கள்,சொல்லாத சேதிகள், உயிர் வெளி, பெயல் மணக்கும் பொழுது, கண்ணாடி முகங்கள், மருதூர் கொத்தன் மீள்தல்,  ஓடும் நதியைப் பாடும் மலர்கள்,  ஆகிய பல கவிதைத் தொகுதிகளிலும்  இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன..  தவிரவும், Sithy Mashoora Suhurdeen என்ற தனது முகநூலில்  தன யதார்த்தமான மன ஓட்டங்களை  பதிவு செய்து வருகிறார்.

 

1982  களில்  நிறைமதி என்ற ஒரு  கையெழுத்துச் சஞ்சிகையுடன்  தன் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்த மஷூரா,  அக்கினி கவிதை இதழ்,புன்னகை நினைவுகள்,  யௌவனம் , அலவாக்கரை, புதையல், என் இனிய வாழை மரமே, சுடர், நாற்று,  ஒளியைத் தேடும் நிழல்கள்,  விதியை வென்றவன், நந்தவனம், மொட்டு, பேசும் பொற் சித்திரங்கள்,  பாடும் வானம்பாடிகள், உப்பட்டி பூந்தாளி, ஓட்டோகிராப், ,பெயல்,   முதலான பல்வேறு நூல்கள் சிறப்பு மலர்கள், சஞ்சிகைகளுக்கு  ஆசிரியராகவும் பொறுப்பாளராகவும் பங்களித்துள்ளார்.

 

வாழ்வோரை வாழ்த்துவோம்,அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் வரலாறு இலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சி, மல்லிகை, வார முரசொலி, யாத்ரா,  The Island  போன்ற பல்வேறு நூல்களில்  இவர் பற்றிய  பல்வேறுபட்ட  குறிப்புரைகள் இடம்பெற்றுள்ளன..

 

மஷூரா சுஹுருத்தீன் 1 9 9 1 இல் தேசிய  இளைஞர் சேவை மன்றம் நடத்திய பாடலாக்கப் போட்டியிலும் 1 9 9 3 இல் சுதந்திர இலக்கிய விழாவில், பாடல் இயற்றல் போட்டியிலும் 1 9 9 8 இல், கல்வி அமைச்சு நடத்திய  கவிதைப் போட்டியிலும் 2 0 0 1 இல்  இலங்கையர்க்கோன்  நினைவு சிறுகதைப் போட்டியிலும் 2 0 0 7 இல், ஜனபோத கேந்திரய, அமைப்பின் நாடகத் தயாரிப்பு  நிகழ்ச்சியிலும் பங்குபற்றி பற்பல பரிசுகளையும்  விருதுகளையும் வெண்றெடுத்துள்ளார்.

 

தவிரவும், நிறைமதி கலை இலக்கியக் கழகத்தின்  ஸ்தாபக தலைவராகவும்,  சம்மாந்துறை தமிழ் சங்கத்தின்  சேமநலச் செயலாளராகவும்,  படர்க்கைகள்  இணைய  அமைப்பில்  உப தலைவராகவும்  இருந்து  தன் தமிழ்ப் பணியைத் திறம்பட ஆற்றி வருகிறார்.

 

2 0 0 2 இல், தென்கிழக்கு ஆய்வு மையம்  சிறந்த இளம் இலக்கியவாதி  என்ற நினைவுச் சின்னம்  வழங்கி கௌரவித்தது.. 2 0 0 4 இல்,  தினச்சுடர் பத்திரிகை  சிறந்த கவிஞருக்கான சான்றிதழ் அளித்தது. 2 0 0 7 இல், ஜனபோத கேந்திறய அமைப்பு  சிறந்த நாடகத் தயாரிப்புக்கான  விருதளித்தது.   2 0 0 8 இல்,  சம்மாந்துறை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்திப் பிரிவு  மகளிர் தின கௌரவம் அளித்தது.  2 0 0 9 இல்  நிந்தவூர் ஆர்,ஜே. மீடியா  இலக்கியப் பங்களிப்புக்காக  தங்கப் பதக்கம் அளித்தது.

 

2 0 0 9 இல், அகில இன நல்லுறவு ஒன்றியம்  சாமசிறி கலா ஜோதி பட்டமளித்தது.  2 0 0 9  இல், சம்மாந்துறை பிரதேச செயலக சாகித்திய விழாவில் இலக்கியப் பணிக்காக நினைவுச் சின்னமும் சான்றிதழும் அளித்தது.  2 0 1 1  இல் மலையக  கலை கலாச்சார சங்கம்  இரத்தின ஜோதி  எனும் படமளித்தது. .2 0 1 4 இல்,  ஹிஸ்புல்லா பவ்ண்டேசன்  இலக்கியப் பணிக்காக  பொற்கிழியும் விருதும் அளித்து கௌரவித்தது.  201 5 இல்.  ஒற்றுமைப் பாலம் அமைப்பும்,  மஷூராவின் தமிழ்ப் பணியைப் பாராட்டி,  சான்றிதழ் அளித்தது.  2 0 1 6 இல்.  இலங்கை இலக்கிய ஆய்வகம்  உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில்  விருது வழங்கி     கௌரவித்தது..  2 0 1 7 இல்., கலாசார அலுவல்கள் திணைக்கள  கலைஞர் சுவதம்  விருது வழங்கி  கௌரவித்தது.

 

மஷூராவுக்கு  மனமார்ந்த வாழ்த்துக்கள்...

 

தீரன். ஆர்.எம். நவ்ஷாத்

1. 5. 2 0 2 0

 

நதிகளின் தேசிய கீதம்

 

No comments:

Post a Comment