மருதூர் ஜமால்தீனின் ‘’திருப்பம்’’சிறுகதை நூலுக்கு அளித்த முன்னுரை.(2 0 2 3 )
கிழக்கின் மொழிவாண்மையை துல்லியமாகக்
காட்டும் சிறுகதைகள்.
வாய்மொழி வழக்காற்று முறைமையிலிருந்து வேறுபட்டுக் கதை சொல்லும் முறைமை பல பரிமாணங்கள் கண்டபின் தற்போது பின் நவீனத்துவ நெடுஞ்சாலையில் கடுகதியாய் பயணிக்கையில், அதற்கு முற்றிலும் வேறுபட்ட சட்டை அணிந்து கொண்டு வந்திருக்கிறது மருதூர் ஜமால்தீனின் இந்த ‘திருப்பம்’ சிறுகதை தொகுதி.
கதைசொல்லிகளின் வித்தியாசமான விரல் அசைவுகளில் உருவாகும் எழுத்துக்கள் பொதுவாக வெவ்வேறு வித கதையோட்டங்களை காட்டுவது போல், மருதூர் ஜமால்தீனின் புனைவுகளும் அவருக்குரித்தான ஒரு தனித்துவ போக்கில் பயணிக்கின்றன என்பதை இதில் உள்ள கதைகளை வாசிக்கும் போது உணரக் கூடியதாக உள்ளது.
பிறரின் நடை உடைகளைப் பின்பற்றாது, தனக்குத் தோன்றியபடி, தானே நெய்த சட்டைகளை அணிந்து கொண்டு ஜமால்தீனின் கதைகள் நம்மிடையே உலா வருகின்றன..அவற்றில் பல, கதைசொல்லியின் சொந்த வாழ்வியல் அனுபவங்களைப் பேசுவனவாயுள்ளன...சமுகத்தில் இன்றும் வாழும் வர்க்க முரண்பாடுகளை சுட்டுவன...கீழ்த்தட்டு மனிதரின் மன வேக்காடுகளைப் பேசுவன...
மருதூர் ஜமால்தீன் தன் புனைவுகளுக்கு பற்றுக்கோல் தேடி விண்வெளியில் அலையாமல் ,தான் வாழுகிற நிலத்தின் மனிதர்களின் நிகழ்ச்சி நிரல்களையே தன் புனைவுத்தளமாக கொண்டுள்ளார். இதனால் அவரது புனைவுகளில் யதார்த்தம் நிலை நிற்கின்றது.. அதற்கு அவர் பயன்படுத்தியுள்ள பேச்சு மொழியும் இயல்பாக ஒட்டிக் கொள்கிறது.
. பொதுவாக அவர் கதைகளில், கிழக்கு முஸ்லிம் பாமர மக்களின் பேச்சுமொழியை மிக இலாவகமாகவும் அற்புதமாகவும் கையாண்டுள்ளார்.. இது அவரது கதைகளுக்கு ஒரு வலுவை கொடுக்கிறது.
இத் தொகுப்பில் உள்ள, ‘’தவறுகளை உணர்ந்த போது’’, ‘இருமுகம்’,,’விவாக விடுதலை’, ‘கலந்தன் காக்கா’ போன்ற கதைகளில் ஜமால்தீன் கையாண்டுள்ள மொழிவான்மை அக்கதைகளுக்கு தனியானதொரு உயிர்ப்பைத் தருகின்றன
மேலும், ‘துரோகத்தின் பரிசு’, ‘உயர்ந்தவன்’, போன்ற கதைகளை நீதிபோதனை உரைத்தலாக அமைத்துள்ள போதிலும் அக்கதைகளில் பொதிந்துள்ள யதார்த்தச் செறிவு அக்கதைகளின் இலக்கியப் பெறுமதியை அதிகரித்து விடுகின்றது... தமிழ்மொழிப் பாடப் பரப்புகளுக்கும் இவற்றைச் சிபார்சு செய்யக் கூடிய தகைமை இக்கதைகளுக்கு இருக்கிறது.
முக்கியமாக மருதூர் ஜமால்தீன் தன் சிறுகதைளை பிரவாகமான சொற்களைக்கொண்டு நீட்டத்தில் கொண்டு செல்லாமல் சுருக்கமாகவும் குறுக்கமாகவும் அமைத்திருப்பது பாராட்டத்தக்கது.. எளிமையான மொழியில் இயல்பான உரையாடல்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வாசகருக்குப் பரிமாறியிருக்கும் இந்த உத்தி கதைகளுக்கு வெற்றியைத் தருகிறது. தமிழ்க் கதை மரபுகளின் நீட்சியை கிழக்கு முஸ்லிம்களின் பண்பாட்டுச் சூழலில் வைத்து மிகவும், நுண்ணிய இழைகளாகக் கோர்த்துள்ளார் நூலாசிரியர்.
மருதூர் ஜமால்தீன் தன் கதைகளில் பயன்படுத்தியுள்ள இயற்கை உதாரணங்கள்,பற்றியும் கட்டாயம் பேச வேண்டியுள்ளது.. மிக இயல்பான உவமான, உவமேயங்களை கதைகளில் சரளமாக கலந்து விட்டிருக்கும் முறைமையும் வெகுவாக இரசிக்கத் தக்கது ...மேலும்,
இறுக்கமான கதைக் கருக்களையும் கூட தன் இலகுவான மொழிக் கையாளுகையினால் வாசகருக்கு எளிதாகச் சொல்லிப் புரிய வைக்கிற தன்மையில் இந்தக்
கதை சொல்லியின் ஆற்றல் வெளிப்பட்டு நிற்கிறது. தன் வாழ்வியலின் அனுபவக்கூறுகளையும்,
தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் இயல்புகளையும் இத் தொகுதியில் உள்ள கதைகளில் அவர் சரளமாகப் படிய விட்டிருக்கிறார்.
இஸ்லாமிய வாழ்வியலில் இல்லாத
சாதிப் பாகுபாட்டை, புதிதாக உருவாக்கி அதை இஸ்லாமியர்களிடையே பரிட்சித்துப்
பார்க்கும் சில கயமைத்தனத்தை ‘விவாக விடுதலை’ என்ற கதையில்,
விமர்சித்துள்ளார். நம்மிடையே வாழுகிற சில
மேட்டுக்குடி மனிதரின் மனோவியலை ‘திருப்பம்’, சேற்றில் ஒரு செந்தாமரை , ‘’உள்ளம்
உறுதி பெற்றால்; போன்ற கதைகளில் நன்கு வேரூன்றும்படி பதியமிட்டுள்ளார்..
‘இருமுகம்’, ‘திருந்திய உள்ளம்’ போன்ற படைப்புகளில்,
மானுட மனங்களில் தற்காலிகமாக மூடிக்கிடக்கும் சில குரோத எண்ணங்கள், சில
நேரங்களில் கலைந்து நேர்வழி பெறுகிற தன்மையினை அழகுறச் சித்தரித்துள்ளார்..
‘மனிதம் வாழும்’, ‘படிப்பினை’ ‘பிடிவாதம் கலைந்தது’ போன்ற கதைகள் மானுட வாழ்வியலின் காட்சிப்
படிமங்களை, படிப்பினைகளை வலியுறுத்தி, அநீதிகளுக்கு எதிராக போர்ப்பிரகடணம் செய்கின்ற உன்னதமான படைப்புக்கள் ஆகும்..
இத்தொகுப்பில் உள்ள கதைகள் மூலமாக வாசகருக்கு ஓர் கற்பனாவாத புது உலகத்தைத் தரிசிக்க செய்யாமல், இருக்கின்ற உலகத்துள் வாழுகிற மனிதரின் குணாதிசயப் பண்புகளை வாசகருக்கு படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். தான் கூற எடுத்துக் கொண்ட விடயதானத்தை எளிமையான மொழியில் சித்தரிப்பதில் நூலாசிரியர் மிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார்.
இவ்வாறான கதைகளை நாம் வாசிக்கும்
போது, அடித்தட்டுப் பாமர மக்களின் மீது கழிவிரக்கம் கொள்ளச் செய்துவிடுகின்றன...அம்மக்களை
கரம்தொட்டுக் கைதூக்கி விடுகின்ற எண்ணத்தை வாசகரின் உள்ளத்தில் ஊன்றிவிடுகின்றன..
இது , மருதூர் ஜமால்தீனின் எழுத்துக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.
ஏற்கனவே, கவிதை, காவியம், பாடல்கள், கட்டுரைகள் தழுவிய பல வெளியீடுகளை செய்துள்ளவரும், இலங்கை அரசின் கலாபூஷணம் விருது பெற்றவரும், பிரதேச ரீதியான இலக்கிய வித்தகர் விருதாளருமான மருதூர் ஜமால்தீன் மேலும் பல இலக்கியங்கள் படைத்து உயர வேண்டும் என வாழ்த்துரைக்கின்றேன்.
தீரன்.
ஆர்.எம்.
நௌஷாத்
2 0 2 3 .....................
No comments:
Post a Comment